கொரோனா வைரஸ்: சர்வதேச பாதிப்பு எண்ணிக்கை 6 லட்சத்தை தாண்டியது

6,02,262 பேருக்கு கோவிட்-19 தொற்று

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் உண்டாகும் கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு ஆளானவர்கள் எண்ணிக்கை ஆறு லட்சத்தை கடந்துள்ளது.

அமெரிக்காவின் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் கொரோனா வைரஸ் தகவல் மையம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, இந்திய நேரப்படி சனிக்கிழமை 03.00 மணி வரை உலகம் முழுவதும் 6,02,262 பேருக்கு கோவிட்-19 தொற்றுக்கு உள்ளானது உறுதியாகியுள்ளது.

அவர்களில் 27,889 பேர் உயிரிழந்துள்ளனர்; 1,32,688 பேர் குணமடைந்துள்ளனர்.

ஸ்பெயினில் ஒரே இரவில் 832 பேர் மரணம்

ஸ்பெயினில் கொரோனா வைரஸால் ஒரே இரவில் 832 பேர் இறந்துள்ளனர்.

தற்போது அந்த நாடு முழுவதும் இறந்தவர்கள் எண்ணிக்கை 5,690. இத்தாலிக்கு அடுத்தபடியாக கொரோனா தொற்றால் இறந்தவர்கள் அதிகம் உள்ள நாடு ஸ்பெயின்.

84,498 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்ட இத்தாலியில் 9,134 பேர் இறந்துள்ளனர் என்று ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழத்தில் தரவுகள் தெரிவிக்கின்றன.

வுஹான் நகரில் மீண்டும் துளிர்விடும் இயல்பு வாழ்க்கை

தற்போது உலகியே அச்சுறுத்திவரும் கோவிட்-19 தொற்றுக்கு காரணமான கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க பல நாடுகள் ஊரடங்கை அமல்படுத்திவரும் சூழலில், கொரோனா பரவல் தொடங்கிய நகரில் மீண்டும் இயல்பு வாழ்க்கை ஓரளவு ஆரம்பமாகியுள்ளது.

சென்ற டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள வுஹான் நகரில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது.
இரண்டு மாத காலத்துக்கும் மேலாக வெளியுலகத்துடன் எந்தவிதமான போக்குவரத்துத் தொடர்பும் இல்லாமல் இருந்த நிலையில் அங்கு இன்று, சனிக்கிழமை, நள்ளிரவு ஒரு ரயில் வந்தடைந்ததாக சீன அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த நகரில் உள்ளூர் போக்குவரத்து, வர்த்தக நிறுவனங்கள் செயல்பாடு ஆகியவை மீண்டும் சிறிய அளவில் இயங்கத் தொடங்கியுள்ளன.

ஹூபே மாகாணத்தில் மட்டும் கொரோனவால் இதுவரை 3300 பேர் இறந்துள்ளனர்.

அமெரிக்கா கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது

கொரொனா வைரஸ் தொற்றால் அமெரிக்கா கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், 2 டிரில்லியன் டாலர்கள் மதிப்பிலான நிவாரணத் தொகைக்கு கையெழுத்திட்டார் அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப். அமெரிக்காவில் வேலைவாய்ப்பின்மை 3.3 மில்லியன் என புதிய உச்சத்தை அடைந்துள்ள நிலையில், இந்த நிவாரணத் தொகையானது உடனடியாக நிதி தேவைப்படும் குடும்பங்கள், பணியாளர்கள் மற்றும் தொழில்களுக்கு வழங்கப்படும் என்று அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.