பினாங்கு மாநிலத்தைத் தக்க வைத்துக் கொள்ள முடியும் என தாம் உறுதியாக எண்ணவில்லை என அந்த மாநில முதலமைச்சர் லிம் குவான் எங் கூறுகிறார்.
அதனால் பக்காத்தான் ராக்யாட் தொடர்ந்து அடக்கமாக நடந்து கொள்வதோடு நல்ல சேவைகளையும் தொடர்ந்து வழங்கி வர வேண்டும் என அவர் சொன்னார்.
“அரசியலில் உறுதி என்பது ஏதுமில்லை. நாங்கள் மீண்டும் பினாங்கில் வெற்றி பெறுவோம் என்பது 100 விழுக்காடு நிச்சயமில்லை. தக்க வைத்துக் கொள்ள இயலும் என்று நானும் எண்ண விரும்புகிறேன். என்றாலும் நாம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.”
“நாம் பினாங்கில் வெற்றி பெறும் சாத்தியம் இருப்பதாக பலர் கூறியுள்ள போதிலும் நாம் நிறைய வேலை செய்ய வேண்டும். நாம் தலையைக் குனிந்து கொண்டு அடக்கத்துடன் நடந்து கொள்வதோடு புகழ்ச்சிக்கு மயங்கி விடக் கூடாது. மக்கள் எதிர்பார்ப்பதை நாம் வழங்குவதை உறுதி செய்வதும் முக்கியமாகும்.”
லிம் நேற்றிரவு சிலாங்கூர் டிஏபிக்கு நிதி திரட்டுவதற்காக நடத்தப்பட்ட விருந்தில் பேசினார். அந்த விருந்தில் மாநிலத்தைச் சேர்ந்த டிஏபி தலைவர்களும் ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆதரவாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
மாட் சாபு என அழைக்கப்படும் பாஸ் துணைத் தலைவர் முகமட் சாபுவும் சிலாங்கூர் ஆட்சி மன்ற உறுப்பினர்களான தெரெசா கோக்கும் ரோனி லியூவும் அங்கு இருந்தார்கள்.
கட்சி நோக்கங்களுக்கு பக்காத்தான் அரசாங்கப் பணத்தை பயன்படுத்தாததால் நிதி திரட்டும் விருந்துகள் அவசியம் என லிம் தமது உரையில் வலியுறுத்தினார்.
“நாங்கள் அரசாங்கமாக (சிலாங்கூரிலும் பினாங்கிலும்) அரசங்கமாக இருந்தாலும் உங்களிடமிருந்து நாங்கள் பண உதவியைக் கோர வேண்டியுள்ளது. ஏனெனில் நாங்கள் அரசாங்கத்திடமிருந்து திருடுவது இல்லை.”
“நீங்கள் மசீச விருந்துகளுக்குப் போனால் அவர்கள் உங்களிடமிருந்து பணம் கேட்பது இல்லை. அதற்குப் பதில் நீங்கள் வருவதற்கு அவர்கள் உங்களுக்குப் பணம் கொடுப்பார்கள்,” என லிம் புன்முறுவலுடன் கூறினார்.
பக்காத்தானுடைய கூட்டரசுத் திட்டங்கள் பற்றி அறிய கூட்டத்தினர் ஆர்வம்
கேள்வி பதில் நேரத்துக்காக லிம் தமது உரையைச் சுருக்கிக் கொண்டார். கூட்டரசு அதிகாரத்தை பக்காத்தான் கைப்பற்றுமானால் அதன் கொள்கைகள் எப்படி இருக்கும் என்பதை அறிந்து கொள்ள பலர் கேள்வி எழுப்பினர்.
புக்கு ஜிங்காவை எடுத்துக் காட்டிய அவர் மேல் விவரங்களைத் தரவில்லை. நல்ல ஆளுமைக்கு எடுத்துக்காட்டாக அவர் பினாங்கின் சாதனைகளை காட்டினார்.
தேர்ச்சி பெற்றவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்க அடிப்படை மாற்றங்கள் செய்யப்படுவது முக்கியம் என அவர் சொன்னார். பினாங்கு கூட தேர்ச்சி பெற்றவர்களைத் தக்க வைத்துக் கொள்வதில் சிரமத்தை எதிர்நோக்குவதாக லிம் குறிப்பிட்டார்.
“நாம் எல்லாவற்றையும் தவறுதலாகச் செய்கிறோம் என்பது அதன் பொருள் அல்ல. மாறாக அண்டை நாடுகள் தேர்ச்சி பெற்றவர்களை ஈர்ப்பதற்கு தீவிரமான நடவடிக்கைகளில் எடுக்கின்றன,,” என்றார் அவர்.
தேர்ச்சி பெற்றவர்களுக்கு வெகுமதி அளிக்க கூட்டரசு அரசாங்கம் தவறியிருப்பதும் பிரச்னையைக் கடுமையாக்கியுள்ளது என அந்த பினாங்கு முதலமைச்சர் குறிப்பிட்டார்.
லிம்-முக்கு முன்னதாக மாட் சாபு உரையாற்றினார். அவர் பாரிசான் நேசனல் பின்பற்றுகிற இனவாத அரசியலைச் சாடினார்.
“அம்னோ சொல்கிறது, பாருங்கள், பினாங்கில் இப்போது சீனரான லிம் குவான் எங் முதலமைச்சராக இருக்கிறார். முன்னாள் பினாங்கு முதலமச்சர் கோ சூ கூன், மலாய்க்காரர் என்பதைப் போல அவர்கள் பேசுகின்றனர். அவரை மலாய்க்காரர்கள் மட்டும் விரும்பவில்லை. சீனர்களும் கூட அவரை விரும்பவில்லை,” என அவர் சொன்னார்.
அடுத்த ஆண்டு நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படும் பொதுத் தேர்தலுக்கு டிஏபி
ஏற்பாடு செய்யும் பொருட்டு அதன் நிதி வளத்தைப் பெருக்குவதற்காக அந்தக் கட்சி மேற்கொண்டுள்ள முயற்சிகளில் ஒரு பகுதியாக அந்த விருந்து நடத்தப்பட்டது.