ஷாரிஸாட் விலக வேண்டும் என்கிறார் இன்னொரு அம்னோ தலைவர்

என்எப்சி என்னும் தேசிய விலங்குக் கூட நிறுவன ஊழலில் தமது அமைச்சர் பதவியை மகளிர், சமூக, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் ஷாரிஸாட் அப்துல் ஜலில் துறக்க வேண்டும் என செராஸ் அம்னோ தொகுதித் தலைவர் சையட் அலி அல்ஹாப்ஸி கேட்டுக் கொண்டுள்ளார்.

ஏற்கனவே கினாபாத்தாங்கான் எம்பி பாங் மொக்தார் ராடின், ஷாரிஸாட் விலகிக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். ஆகவே அம்னோ மகளிர் தலைவியுமான ஷாரிஸாட் விலக வேண்டும் என கூறியுள்ள இரண்டாவது அம்னோ தலைவர் சையட் அலி ஆவார்.

மலாய் மொழி நாளேடான சினார் ஹரியான் அந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது.

அம்னோ மகளிர் தலைவிப் பதவியை ஷாரிஸாட் வைத்துக் கொள்ளலாம் என சையட் அலி சொன்னார். ஏனெனில் மகளிர் பிரிவுப் பேராளர்களுக்கு அவருடைய சேவை இன்னும் தேவைப்படுகிறது. மகளிர் தலைவி பதவியை அவர் துறந்தால் கட்சியில் நிலைத் தன்மை குலைந்து விடும் என அவர் கருதுகிறார்.

“அவர் அமைச்சர் பதவியை விட்டு விலகினால் அவரை சிறந்த பெண்மணியாக மக்கள் பார்க்கத் தொடங்குவர். அத்துடன் ஷாரிஸாட், எதிர்வரும் பொதுத் தேர்தலை ஒட்டி கட்சி எந்திரத்தை வலுப்படுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்த முடியும்.”

“அவர் கட்சியை நேசித்தால் அதனைச் செய்ய வேண்டும். இல்லை என்றால் மக்கள் அரசாங்கத்தைப் பற்றித் தவறாக எண்ணத் தொடங்கி விடுவர். அதற்கு ஷாரிஸட்டே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும்,” என சையட் அலி சொன்னதாக சினார் ஹரியான் கூறியது.

ஷாரிஸாட் அரசியலில் நீண்ட காலம் இருந்து விட்டதாக் அவருக்கு என்ன செய்ய வேண்டும் என்பது தெரியும். பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், துணைப் பிரதமர் முஹைடின் யாசின் ஆகியோருடைய அனுமதிக்காக காத்திருக்க வேண்டியதில்லை என்று வெளிப்படையாகப் பேசக் கூடிய அடி நிலைத் தலைவர் எனக் கூறப்படும் சையட் அலி குறிப்பிட்டார்.

அவரது ராஜினாமாவை நஜிப்பும் முஹைடினும் ஏற்றுக் கொள்வார்களா என்பது இன்னொரு விஷயம் என அவர் கருதுகிறார்.

“மற்றவர்கள் தமக்காக முடிவு செய்வதை ஷாரிஸாட் விரும்புவாரா? இல்லை என்றால் கௌரவமாக விலகிக் கொள்ள வேண்டும்,” என வலியுறுத்திய அவர், அந்த சர்ச்சைக்குள் அரசாங்கத்தையும் அம்னோ தலைவர்களையும் இழுக்கக் கூடாது என்றார்.

அரசாங்கப் பதவி ஏதுமில்லாமல் அம்னோ இளைஞர் பிரிவை வெற்றிகரமாக வழி நடத்தி வரும் கைரி ஜமாலுதீனை ஷாரிஸாட் பின்பற்ற வேண்டும் என்றும் சையட் அலி குறிப்பிட்டார்.

அண்மைய வாரங்களில் எதிர்க்கட்சிகள் ஷாரிஸாட்டை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன அரசாங்கம் எளிய நிபந்தனைகளுடன் கொடுத்த 250 மில்லியன் ரிங்கிட் கடனை ஷாரிஸாட்டின் கணவரும் என்எப்சி தலைவருமான முகமட் சாலே இஸ்மாயில் தவறாகப் பயன்படுத்தியுள்ளதாக எதிர்க்கட்சிகள் கூறிக் கொண்டுள்ளன.

அம்னோ மகளிர் பிரிவின் மகத்தான ஆதரவைப் பெற்றுள்ள ஷாரிஸாட், அந்த நிறுவனத்துக்கும் தமக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் கூறியதுடன் குற்றச்சாட்டுக்களுக்குப் பதில் அளிக்கவும் மறுத்துள்ளார்.

ஆனால் அவர் அந்தக் குற்றச்சாட்டுக்களுக்குப் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் பதவி விலக வேண்டும் என்றும் பல அம்னோ பேராளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

TAGS: