கொரோனா : பிரிட்டன் பிரதமருக்கு தீவிர சிகிச்சை, சர்வதேச நிலவரம் என்ன?

  1. இந்திய நேரப்படி செவ்வாய் காலை 04.58 மணி நிலவரப்படி உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றால் 13,45,048 பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

  2. இவர்களில்74,565 பேர் உயிரிழந்துள்ளனர். 2,76,515 பேர் குணமடைந்துள்ளனர் என்று அமெரிக்காவின் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத் தரவுகள் தெரிவிக்கின்றன.

  3. உலக நாடு ஒன்றின் அரசுக்கு தலைமை தாங்குபவர்களில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட முதல் நபரான பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

  4. உலகிலேயே அதிக எண்ணிக்கையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ள நாடான அமெரிக்காவில் இதுவரை 3,66,614 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

  5. அதிகபட்சமாக இத்தாலியில் 16,523 பேர் இறந்துள்ளனர்; ஸ்பெயினில் 13,341 பேர் இறந்துள்ளனர்.

  6. ஜனவரி மாதம் சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் கோவிட்-19 தொற்றால் உண்டான மரணங்கள் குறித்த விவரங்களை வெளியிடத் தொடங்கியது முதல், கொரோனா வைரஸ் காரணமாக மரணம் நிகழாத முதல் நாளாக நேற்று (திங்கள்கிழமை) உள்ளது.

  7. மோசமான அளவில் இறப்புகளைச் சந்தித்த இத்தாலி மற்றும் ஸ்பெயின் ஆகிய ஐரோப்பிய நாடுகளில் புதிதாக கோவிட்-18 தொற்று உண்டாகும் விகிதம் குறைந்துள்ளது.

  8. உலகிலேயே முதல் முறையாகப் புலி ஒன்றுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சீனாவில் மரணம் நிகழாத முதல் நாள்

கொரோனா வைரஸ் காரணமாக சீனாவில் நேற்று எந்த உயிரிழப்பும் நிகழவில்லை.

ஜனவரி மாதம் சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் கோவிட்-19 தொற்றால் உண்டான மரணங்கள் குறித்த விவரங்களை வெளியிடத் தொடங்கியது முதல், கொரோனா வைரஸ் காரணமாக மரணம் நிகழாத முதல் நாளாக நேற்று (திங்கள்கிழமை) உள்ளது என்று ஏ.எஃப்.பி செய்தி முகமை தெரிவிக்கிறது.

நேற்று சீனாவில் தொற்று இருப்பதாக கண்டறியப்பட்ட 32 பேரும் வெளிநாடுகளில் இருந்து அங்கு வந்தவர்கள்.
கொரோனா வைரஸால் 81,740 பேர் பாதிக்கப்பட்ட சீனாவில் 3,300க்கும் மேலானவர்கள் உயிரிழந்தனர்.

பிரிட்டன் பிரதமருக்கு தீவிர சிகிச்சை

கொரோனா வைரஸ் அறிகுறி தீவிரமடைந்ததால் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

பிரிட்டன் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை மாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், வைரஸ் தாக்குதல் தீவிரமடைந்ததால் மருத்துவர்கள் ஆலோசனைக்குப் பிறகு அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் தற்போதைய நிலவரம்

தமிழ்நாட்டில் மேலும் 50 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது திங்களன்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6ஆக அதிகரித்துள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த விவரங்களை தமிழக சுகாதாரத்துறைச் செயலர் பீலா ராஜேஷ் வெளியிட்டார்.

BBC.TAMIL