அமெரிக்காவில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது

அமெரிக்காவில் ஒவ்வொரு நாளும் கொரோனா வைரஸால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது.

இறப்பு செய்தி எவ்வளவு துயரமாக இருக்கிறதோ, தங்கள் அன்புக்குரியவர்களுக்கு முறையாக இறுதி சடங்குகூட செய்ய முடியவில்லையே என்ற சோகத்தில் பல அமெரிக்கர்களும் இருக்கிறார்கள்.

உலகிலேயே அதிக எண்ணிக்கையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ள நாடான அமெரிக்காவில் இதுவரை 3,96,223 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 8,500க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.

ஆனால் அங்கு ஒரு லட்சத்தில் இருந்து 2 லட்சத்து 40 ஆயிரம் பேர் வரை உயிரிழக்க வாய்ப்புள்ளதாக வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில், மக்கள் கூட்டம் கூடுவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இறுதி சடங்கில் அதிக மக்கள் கலந்துகொள்ள முடியாது. சில நேரங்களில் யாருமே கலந்து கொள்ள முடியாத நிலையும் இருக்கிறது.

“கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்களை யாரும் தொட வேண்டாம்” என அந்நாட்டின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புப்பிரிவு விதிமுறை வகுத்துள்ளது.

“முன்பெல்லாம் நாங்கள் இறந்தவர்களை புதைக்க கல்லறை வரை செல்வோம். ஒவ்வொருவராக இறந்தவரின் உடல் மீது ஒருபிடி மண் அள்ளிப் போடுவோம். தற்போது இதற்கெல்லாம் தடை விதிக்கப்பட்டுள்ளது” என்கிறார் இந்த கொரோனா நெருக்கடியை சமாளித்துவரும் இமாம் ஆடம் ஜமால்.

“தற்போது தர்காக்கள் மூடப்பட்டுள்ளன. நாங்கள் ஒன்று கூடவே முடியாது. அனைவரும் 6 அடி இடைவெளிவிட்டு நிற்க வலியுறுத்தப்பட்டுள்ளது.”

இறந்தவர்களை புதைப்பதற்கு முன் அவரது உடலை சுத்தம் செய்வது வழக்கம். தற்போது அதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக ஜமால் கூறுகிறார்.

அப்படி இறந்தவர்களின் உடல்களை சுத்தம் செய்ய வேண்டும் என்பது மதரீதியிலான அல்லது பாரம்பரிய வழக்கம் என்றால், அந்தந்த சமுதாயத்தின் கலாசார மற்றும் மதத்தலைவர்கள் மற்றும் இறுதிசடங்கு பணியாளர்கள் ஆகியோருடன் இணைந்து, பெரிதும் பாதிக்கப்படாதவாறு நடத்துமாறு நோய்தடுப்புப் பிரிவின் விதிமுறைகள் கூறுகின்றன.

இதுகுறித்து இமாம் ஜமால் கூறுகையில், “தற்போதைய சூழலில் யாரேனும் கோவிட் தொற்று வந்து இறந்தாலோ அல்லது அதன் அறிகுறிகள் இருந்து உயிரிழந்தாலோ, அப்போது எங்களுக்கு பாதுகாப்பு கவசம் கிடைக்கவில்லை என்றால், இறந்தவர்களின் உடல்களை சுத்தம் செய்ய முடியாது. அப்படியே பாதுகாப்புக் கவசங்கள் கிடைத்தாலும் ஒருசில நிமிடங்கள் மட்டுமே தொட்டு சுத்தம் செய்ய முடியும்” என தெரிவித்தார்.

மற்ற சமுதாயங்களிலும் கிட்டத்தட்ட இதே சூழல்தான் நிலவுகிறது.

“முஸ்லிம்கள் அல்லது கிறிஸ்துவர்கள் போலவே இந்துக்களும் பல பிரச்சனைகளை சந்திக்கிறார்கள்… ஆனால், காலத்திற்கு ஏற்றார்போல மக்கள் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும்” என்று கூறுகிறார் இந்திய அமைப்புகளின் கூட்டமைப்பின் தலைவர் அனில் பன்சால்.

தாமதமாகும் இறுதி சடங்கு நடைமுறைகள்

இறுதிசடங்குகள் செய்வது என்பது அமெரிக்காவில் மிகப் பெரிய தொழிலாகும். கடந்த ஆண்டு மட்டும் அதன் மதிப்பு 17 பில்லியன் டால்ரகள் ஆகும்.

இறுதி சடங்குகள் செய்ய மொத்தம் 21,000க்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. தற்போது உயிரிழப்புகள் அதிகமாகி வருவதால், எங்கேயும் இடம் இல்லாமல் இருக்கிறது.

அமெரிக்காவில் கொரொனா தொற்றின் மையமாக விளங்கும் நியூயார்க்கில், தகனம் செய்யும் இடங்கள் 24 மணி நேரமும் இயங்கி வருவதாக அறிக்கை ஒன்று கூறுகிறது.

மருத்துவமனைகளில் உயிரிழந்தவர்களின் உடல்களை வைக்க இடமில்லாமல், குளிரூட்டப்பட்ட ட்ரக்குகளில் அவை வைக்கப்படுகின்றன.

இறுதி சடங்கு முறையில் இரண்டு பகுதிகள் உள்ளன. ஒன்று இறுதி சடங்கு அல்லது மரியாதை செலுத்துவது. இதில் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்த குடும்ப உறுப்பினர்கள் ஒன்று கூடுவது.

அடுத்து, உயிரிழந்தவர்களின் உடலை தகனம் செய்வது அல்லது புதைப்பது.

உடலை வைக்கும் பெட்டி, உடலை புதைக்க குழி தோண்டும் பணியாளர்கள், மற்றும் அந்த நிலத்தின் விலை ஆகியவற்றை பொறுத்து, ஒருவரை புதைக்க 1000 முதல் 7000 டாலர்கள் வரை செலவாகும் என்று இதற்கான வல்லுநர் ஒருவர் தெரிவித்தார்
அமெரிக்காவில் 2019ஆம் ஆண்டில் 55 சதவீதம் பேர் தகனம் செய்வதையும், 39 பேர் புதைக்க வேண்டும் என்பதையும் தேர்ந்தெடுத்துள்ளனர்

“இறுதி சடங்கு செய்யும் இடங்கள், இறந்தவர்களின் ஆஸ்தியை நேரடியாக கல்லறைக்கு அனுப்பிவிடுவார்கள். அங்கு உடனடியாக அது புதைக்கப்படும்” என்கிறார் வாஷிங்டன் மாநில இறுதி சடங்கு இயக்குநர்கள் அமைப்பின் ராம் காஃப்
“கல்லறையில் பணிபுரிபவர்களை தவிர வேறு எந்த குடும்ப உறுப்பினருக்கும் அங்கு அனுமதி இல்லை. அனைத்தும் முடிந்த பிறகு குடும்ப உறுப்பினர்கள் கல்லறைக்கு வரலாம். ஆனால், கூட்டம் கூடக்கூடாது, எந்த சடங்குகளும் செய்யக்கூடாது” என்று அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் சிலர் இறந்த உடல்களை குளிர்சாதனத்தில் வைப்பதை தேர்ந்தெடுக்கிறார்கள். கொரோனாவால் அல்லாது வேறு ஏதேனும் காரணத்தினால் உயிரிழந்தவர்களுக்கு மட்டுமே இதனை தேர்வு செய்ய முடியும். நிலைமை சற்று சீரான பிறகு, இவர்கள் இறுதி சடங்குகளை நடத்த காத்திருக்கிறார்கள்.

பணியாளர்களின் பாதுகாப்பு

இறுதி சடங்கு செய்யும் இடங்களில் இருப்பவர்களின் பாதுகாப்பும் ஒரு பிரச்சனையாகி வருகிறது. உயிரிழந்தவர்களை அவர்கள்தான் கையாள்கிறார்கள். ஒருசில சமயங்களில் உடலை சுத்தம் செய்வது போன்ற மத சடங்குகள் செய்வதும் அவர்கள்தான் என்பதால் பணியாளர்களின் பாதுகாப்பும் இங்கு முக்கியமானது.

குறைந்த அளவு தண்ணீர் பயன்படுத்தி உடல்களை சுத்தம் செய்வது, உடலில் இருந்து வெளியேறும் திரவங்களை கட்டுப்படுத்தவது, வெவ்வேறு துண்டுகளைக் கொண்டு துடைப்பது, கிருமி நாசினிகள் கொண்டு பொருட்களை சுத்தம் செய்வது என பல்வேறு வழிமுறைகள் இருக்கின்றன.

உயிரிழந்தவர்கள், கொரோனா தொற்றால் இறந்தார்களா இல்லையா என்ற தகவல்களை மருத்துவமனைகள் சொல்லலாம் அல்லது சொல்லாமலும் இருக்கலாம் என்பதால், அனைத்து உடல்களையும் பணியாளர்கள் கவனமாகவே கையாள வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

முகக்கவசம், கையுறைகள், பாதுகாப்பு உடை போன்ற பொருட்களுக்கு மருத்துவர்கள், செவிலியர்கள் மத்தியில் எப்படி தட்டுப்பாடு நிலவுகிறதோ, அதேபோலதான் இறுதி சடங்கு நடக்கும் இடங்களிலும்.

இறுதி சடங்கின்போது குடும்பங்கள் இருக்க முடியாததுதான் இதன் கடினமான பகுதி. பலரும் இறுதி சடங்குகளை காணொளியில்தான் பார்க்கிறார்கள்.

வரும் நாட்கள் எப்படி இருக்கும்?

தினம்தோறும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருப்பதால், மக்களின் மனநிலை குறித்த கவலையும் அதிகமாகிறது.

“கொரோனா நோயாளிகள் உயிரிழக்கும் முன் தனித்து வைக்கப்பட்டிருப்பார்கள். அதனால், உயிரிழக்கும்போது அவர்களது குடும்ப உறுப்பினர்கள் அருகில் இருக்க மாட்டார்கள். இறுதி சடங்கின்போதும் பல கட்டுப்பாடுகள் இருக்கின்றன” என்கிறார் காஃப்.
இந்நிலையில் உயிரிழப்பவர்களின எண்ணிக்கை தொடர்ந்து அதிகமாகிக் கொண்டே இருப்பதை தன்னால் உணர முடிகிறதாக கூறுகிறார் இறுதிச்சடங்குகள் செய்யும் தொழிலில் இரண்டாவது தலைமுறையாக இருக்கும் ஃபிட்ச்.

BBC.TAMIL