அமெரிக்காவில் தொடர்ந்து இரண்டாவது நாளாக சுமார் 2000 மரணங்கள் பதிவாகி உள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ பல்கலைக்கழக தரவுகள் கூறுகின்றன.
ஒரே நாளில் அதிக மரணங்கள் பதிவாகியுள்ள எண்ணிக்கை புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
நேற்று முன்தினம் 1,939 பேர் இறந்ததாகவும், நேற்று ஒரே நாளில் 1,973 பேர் இறந்ததாகவும் ஏ.எஃப்.பி முகமை செய்தி வெளியிட்டுள்ளது.
கொரோனா தொற்றால் உலகிலேயே மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவில் இதுவரை 4,31,838 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 14,695 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5,734ஆக உயர்ந்துள்ளது என ஏ.என்.ஐ செய்து முகமை தெரிவிக்கிறது.
இறந்தவர்களின் எண்ணிக்கையும் 149இல் இருந்து அதிகரித்து 166 ஆகியுள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 540 பேருக்கு கோவிட்-19 தொற்று இருப்பது தெரியவந்துள்ளது என்று இந்திய சுகாதார மற்றும் குடும்பநலத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுவரை இந்தியாவில் கோவிட்-19 நோய்த்தொற்றுக்கு உள்ளான 473 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 5095 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்திய / இலங்கை நேரப்படி வியாழன் காலை 05.40 மணி நிலவரப்படி உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றால் 15,13,358 பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இவர்களில் 88,415 பேர் உயிரிழந்துள்ளனர். 3,29,329 பேர் குணமடைந்துள்ளனர் என்று அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத் தரவுகள் தெரிவிக்கின்றன.
உலகிலேயே அதிக எண்ணிக்கையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ள நாடான அமெரிக்காவில் இதுவரை 4,30,376 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதிகபட்சமாக இத்தாலியில் 17,669 பேர் இறந்துள்ளனர்; ஸ்பெயினில் 14,792 பேர் இறந்துள்ளனர்.