கடுமையான ஊரடங்கு, சமூக விலகல் – வூஹான் இந்தியரின் அறிவுரை

வூஹான்: கடுமையான ஊரடங்கும், சமூக விலகலை கடைப்பிடிப்பதும் தான் இந்தியாவை கொரோனா வைரஸிலிருந்து காப்பாற்றும் என வூஹானில் தங்கியிருந்த இந்தியர் கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் முதலில் தோன்றிய வூஹான் நகரில் ஏராளமான இந்தியர்கள் வேலை மற்றும் கல்விக்காக தங்கியிருந்தனர். நிலைமை சிக்கலாவதை உணர்ந்து அவர்களில் பலர் வெளியேற நினைத்தனர். ஏர் இந்தியா விமானம் மூலம் 700-க்கும் மேற்பட்ட இந்தியர்களை அரசு அழைத்து வந்துவிட்டது. சிலர் தைரியமாக அங்கேயே தங்கிவிட்டனர். இந்நிலையில், 76 நாட்களுக்கு பிறகு ஊரடங்கு, புதன்கிழமை முற்றிலுமாக முடிவடைந்ததால், அவர்கள் வெளியே வந்துள்ளனர்.
கேரளாவை சேர்ந்த அருண்ஜித் என்பவர் வூஹானில், ஹைட்ரோபயலாஜிஸ்டாக பணியாற்றியவர்.

இவர் நாடு திரும்புவது தனது வயதான பெற்றோர்களுக்கும், மனைவி, குழந்தைகளுக்கும் ஆபத்து உண்டாக்கும் என கருதி அங்கேயே தங்கிவிட்டார். அவருக்கு, அவரது நிறுவனமும், சக நண்பர்களுக்கு இந்த 76 நாட்கள் உதவியுள்ளனர்.

“73 நாட்கள் எனது அறையிலேயே முடங்கி இருந்தேன். என் ஆய்வகத்திற்கு அனுமதி பெற்று சென்று வந்தேன். இன்று சரியாக பேசுவதற்கு தடுமாறுகிறேன். ஏனென்றால், பேசுவதற்கு கூட ஆளில்லாமல் பல வாரங்களை கழித்துள்ளேன். அனைவரும் அவரவர் வீட்டிலேயே இருந்தனர். இன்று உயிர் பிழைத்ததை எண்ணி மகிழ்ச்சியடைகிறேன். ஆனாலும் வெளியே செல்ல விரும்பவில்லை. பலருக்கு அறிகுறி ஏதுமில்லாமல் கொரோனா வைரஸ் தொற்று உள்ளது. இதனால் நகர மக்கள் பலரும் அச்சத்துடனேயே உள்ளனர்” என அருண்ஜித் தெரிவித்தார்.

“இந்தியா ஊரடங்கு என்ற சரியான முடிவை எடுத்துள்ளது. ஆனால் மழைக்காலம் வரும் போது மக்களின் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து பெரும் பிரச்னை ஏற்படக் கூடும். வூஹான் வழங்கும் பாடம் என்றால், அது ஊரடங்கும், சுய தனிமைப்படுத்தலும் தான். அதனை கட்டாயமாக பின்பற்றியதால் தான், வைரஸ் காட்டுத் தீ போல் பரவாமல் தடுக்கப்பட்டது. டிசம்பர், ஜனவரி மாதங்களில் வைரஸை கண்டறிவது மிகவும் கடினமாக இருந்துள்ளது. அது கண்டுபிடிக்கப்பட்ட போது, வைரஸ் வேகமாக பரவத் தொடங்கிவிட்டது” என்றார்.

malaimalar