நியூயார்க்: ”உயிரி பயங்கரவாத தாக்குதல் நடந்தால் எப்படியிருக்கும் என்பதை ‘கொரோனா’ பாதிப்பு உணர்த்தியுள்ளது,” என, ஐ.நா., பொதுச் செயலர், அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.
உலகெங்கும் கொரோனா பரவல் மக்களை காவு வாங்கிக் கொண்டிருக்கும் நிலையில், இதன் தாக்கம் குறித்து, ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில், நேற்று முதன் முறையாக கூடி விவாதித்தது. டொமினிக் குடியரசு தலைமையில், ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், அமெரிக்கா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட, 15 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
ஐ.நா., பொதுச் செயலர், அன்டோனியோ குட்டரெஸ் பேசியதாவது: ஐ.நா., துவங்கப்பட்ட, 75 ஆண்டுகளில், இதுவரை இல்லாத வகையில், பெரும் சர்வதேச துயரத்தை, சபை சந்தித்துள்ளது. கொரோனாவால், 16 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்; 95 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
உயிரி பயங்கரவாத தாக்குதல் நடந்தால் எப்படியிருக்கும் என்பதை, கொரோனா பாதிப்பு உணர்த்தியுள்ளது. இதை, பயங்கரவாத அமைப்புகள் கையிலெடுத்தால், சர்வதேச சமூகம், இதே போன்ற பாதிப்பை சந்திக்கும் என, எச்சரிக்கிறேன். இத்தகைய தீவிரமான பிரச்னையில், ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.
dinamalar