ஷேக் முஜிபுர் ரஹ்மான் கொலை வழக்கில் முன்னாள் ராணுவ தளபதிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்

வங்காளதேச முன்னாள் ராணுவ தளபதி அப்துல் மஜித்

வங்காளதேச முன்னாள் அதிபர் ஷேக் முஜிபுர் ரஹ்மான் கொலை வழக்கில் தொடர்புடைய முன்னாள் ராணுவ தளபதி அப்துல் மஜித்திற்கு இன்று தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

டாக்கா: பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் இருந்த கிழக்கு பாகிஸ்தான் 1971-ம் ஆண்டு சுதந்திரம் அடைந்து வங்காளதேசம் என்ற தனி நாடாக உருவானது.

தனி நாடான வங்காளதேசத்தின் முதல் அதிபராக செயல்பட்டவர் ஷேக் முஜிபுர் ரஹ்மான். இவர் தற்போது அந்நாட்டின் பிரதமராக செயல்பட்டுவரும் ஷேக் ஹசினாவின் தந்தை ஆவார்.

இதற்கிடையில், அப்போது ராணுவ தளபதியாக இருந்த அப்துல் மஜித் என்பவர் உள்பட ராணுவ அதிகாரிகள் இணைந்து ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் 1975-ம் ஆண்டு அதிபர் ஷேக் முஜிபுர் ரஹ்மான், அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சில அரசியல் தலைவர்களை படுகொலை செய்தனர்.

இந்த படுகொலை தொடர்பான வழக்கில் அப்துல் மஜித் உள்ளிட்ட ராணுவ அதிகாரிகளுக்கு 1998-ம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதில் பல ராணுவ அதிகாரிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

ஆனால் இந்த தீர்ப்பு வெளியான சமயத்தில் அப்துல் மஜித் வங்காளதேசத்தில் இருந்து தப்பியோடி தலைமறைவானார். வங்காளதேசத்தில் இருந்து தப்பித்த அவர் இந்தியாவில் கொல்கத்தா நகரில் தலைமறைவாக வாழ்ந்து வந்தார்.

இந்தியாவில் சுமார் 23 ஆண்டுகள் தலைமறைவாக வாழ்ந்து வந்த அப்துல் மஜித் கடந்த மாதம் மார்ச் மீண்டும் வங்காளதேசம் திரும்பியுள்ளார்.

தலைநகர் டாக்காவில் பதுங்கி இருந்த அப்துல் மஜிதை ரகசிய தகவலின் அடிப்படையில் கடந்த செவ்வாய்க்கிழமை போலீசார் கைது செய்தனர்.

இதையடுத்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அப்துல் மஜிதை உடனடியாக தூக்கிலிட அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.

தனக்கு வழங்கப்பட்ட தண்டனையை உடனடியாக நிறுத்த வேண்டும் என மஜித் வங்காளதேச அதிபர் அப்துல் ஹமிதிடம் கருணை மனுவை தாக்கல் செய்தார். இந்த கருணை மனு அதிபரால் நேற்று  நிராகரிக்கப்பட்டது.

இந்நிலையில், முன்னாள் அதிபர் ஷேக் முஜிபுர் ரஹ்மான் கொலை வழக்கில் தொடர்புடைய முன்னாள் ராணுவ தளபதி அப்துல் மஜித்திற்கு டாக்காவில் உள்ள மத்திய சிறைச்சாலையில் இன்று தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

malaimalar