கில்ஜித் பல்திஸ்தானில் கொரோனா பரவ பாக்., காரணம் !

வாஷிங்டன்: ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள கில்ஜித் பல்திஸ்தானுக்கு, ஈரான் சென்று வந்தவர்களை பாகிஸ்தான் அனுப்பி வருவதால், கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக, அந்த பகுதியை சேர்ந்த அரசியல் ஆர்வலர் ஷெங்கே எச் ஷெரீங் தெரிவித்துள்ளார்.

குற்றச்சாட்டு

பாகிஸ்தானில், 4,788 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதில் 71 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த கொரோனா வைரஸ் காரணமாக, பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு, கொரோனாவை எதிர்கொள்ள போதிய மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை. கில்ஜித் பல்திஸ்தானில், மார்ச் 23ல், ஒசாமா ரியாஸ் என்ற இளம் மருத்துவர் கொரோனாவால் பலியானார். அந்த பகுதியில் கொரோனாவுக்கு பலியான முதல் நபர் இவர் தான்.

ஈரான் சென்று, கில்ஜித் பல்திஸ்தான் திரும்பிய கொரோனா நோயாளிக்கு, சிகிச்சை அளித்த போது, டாக்டருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. இதனை அறியாத அவர், உயிரிழப்பதற்கு முன்னர் பலருருக்கு சிகிச்சை அளித்துள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் ஈரான் நாட்டுடனான எல்லையை பாகிஸ்தான் மூடினாலும், யாத்திரையாக பாகிஸ்தானியர்கள் ஈரான் சென்று வருவதை அந்நாட்டு அரசால் தடுக்க முடியவில்லை. அப்படி சென்று வருபவர்களை, கில்ஜித் பல்திஸ்தானுக்கு பாகிஸ்தான் அனுப்பி வைப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது

பாதிப்பு அதிகரிப்பு

இது தொடர்பாக கில்ஜித் பல்திஸ்தான் பகுதியை சேர்ந்த அரசியல் ஆர்வலர் ஷெங்கே எச் ஷெரீங் கூறியதாவது: கில்ஜித் பல்திஸ்தானில் போதிய மருத்துவ வசதிகள் மற்றும் மருந்துகள் இல்லாத நிலையில், அங்கு, ஈரான் சென்று வந்தவர்களை பரிசோதனை செய்யாமல் பாகிஸ்தான் அரசு அனுப்பி வைக்கிறது. இது, அதிகாரிகளுக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் முழுவதும் ஊரடங்கை அமல்படுத்த தவறியதால், கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

பிரதமர் மோடிக்கு பாராட்டு

அதேநேரத்தில், இந்திய பிரதமர் மோடி மீது அந்நாட்டு மக்களுக்கு நம்பிக்கை உள்ளது. செல்வாக்கு மிகுந்தவராக திகழ்கிறார். இதனால், அவரால், கொரோனா வைரசை கட்டுப்படுத்த உறுதியான நடவடிக்கை எடுக்கமுடிகிறது. அதனை விட முக்கியமாக, இந்திய அரசுக்கு, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் ஒத்துழைப்பு அளிக்கின்றன. சார்க் நாடுகளில், கொரோனா வைரசால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான், பிரதமர் மோடியை பின்பற்ற வேண்டும். நாடு முழுவதும் ஊரடங்கை அமல்படுத்த வேண்டும். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின், தோல்வியற்ற கொள்கைகள் காரணமாக, கொரோனா வைரசின் மையமாக கில்ஜித் பல்திஸ்தான் மாறி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

dinamalar