கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் வீடு திரும்பினார்

லண்டன், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனையும் (வயது 55) கொரோனா வைரஸ் விட்டு வைக்கவில்லை. அவருக்கு அந்த வைரஸ் தாக்கி இருப்பது 2 வாரங்களுக்கு முன் தெரியவந்தது. இருப்பினும் லண்டன் டவுனிங் வீதியில் உள்ள பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் தன்னை அவர் தனிமைப்படுத்திக் கொண்டார். அரசு பணிகளையும் கவனித்து வந்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று அவருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்ததால் டாக்டர்கள் ஆலோசனைப்படி லண்டன் செயின்ட் தாமஸ் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். மறுநாளில் அவரது உடல்நிலை, கொஞ்சம் மோசம் அடைந்ததால் தீவிர சிகிச்சைப்பிரிவில் சேர்க்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் இரவு, பகலாக சிகிச்சை அளித்த நிலையில் உடல் நிலை சற்று தேறியது. அதைத்தொடர்ந்து அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார்.

அவரது உடல் நிலை தேறியதால், நேற்று மருத்துவமனை வளாகத்தில் நடைப்பயிற்சி மேற்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகின.  இந்த நிலையில், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியதாக ஏ.எப்.பி  செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. போரிஸ் ஜான்சன் வீடு திரும்பினாலும் அரசுப்பணிகளை தற்போது தொடர வேண்டாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

dailythanthi