உலகளவில் இதுவரை 1,918,855 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுக் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 448,998 ஆக உள்ளது என ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் சமீபத்திய தரவுகள் கூறுகின்றன.
உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 119,588 ஆக உள்ளது.
தற்போதைய நிலவரப்படி அமெரிக்காவில் 581,679 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. உலகிலேயே அதிக எண்ணிக்கையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ள நாடாக அமெரிக்கா விளங்குகிறது.
கொரோனா வைரஸ் தோன்றிய சீனாவில் புதிதாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மெல்ல ஏறுமுகம் காணுகிறது.
சீனாவில் ஒருகட்டத்தில் புதிதாக யாரும் கொரோனாவால் பாதிக்கப்படாமல் இருந்தனர். ஆனால், கடந்த இரு தினங்களாகப் பலருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அங்கு 89 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதற்கு முந்தைய தினம் இது 108 ஆக இருந்தது. இந்த எண்ணிக்கைதான் கடந்த ஐந்து வாரங்களின் அதிகம்.
சீனாவில் புதிதாக கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களில் பெரும்பாலானவர்கள் ரஷ்யாவிலிருந்து வந்தவர்கள் என்கிறது அந்நாட்டு சுகாதாரத் துறை.
புதிதாக கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 89 பேரில் 86 பேர் ரஷ்யாவிலிருந்து நாடு திரும்பியவர்கள் என்கிறது சீனா.
சரி சர்வதேச அளவில் கொரோனா தொடர்பாக நடந்த பிற செய்திகளை இங்கே காண்போம்.
• நியூயார்க்கில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,000த்தை கடந்தபோதிலும், முடக்கப்பட்ட நகரங்களை இயல்புநிலைக்கு கொண்டுவருவதற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்துக் கலந்தாலோசிக்கத் துவங்கியுள்ளது அந்நாடு.
• நியூயார்க, நியூ ஜெர்ஸி உள்ளிட்ட ஆறு அமெரிக்க மாநிலங்களின் ஆளுநர்கள் முடக்க நிலையைத் திரும்பிப் பெறுவது குறித்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
• இந்தோனீசிய கிராமத்தில் மக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்காக இரவு நேரங்களில் தன்னார்வலர்கள் சிலர் பேய் போல உடை அணிந்து பொது மக்களுக்கு கொரோனா வைரஸ் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர். இந்தோனேசீயாவின் ஜாவா தீ வில் தன்னார்வலர்கள் சிலர் இரவு நேரத்திலும் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர்.
• பிரிட்டனில் அறிவிக்கப்பட்டு நடைமுறையில் உள்ள தொடக்கநிலையை இந்த வாரம் திரும்பப் பெறுவதற்கு எந்த சாத்தியமும் இல்லை என அந்நாட்டு அதிகாரிகள் கூறியுள்ளனர். இது தொடர்பாகப் பிரிட்டன் வெளியுறவுத் துறை அமைச்சர் கூறுகையில், முடக்க நிலை வைரசை கட்டுப்படுத்த உதவியுள்ளது. ஆனால் வைரஸ் பரவும் எண்ணிக்கையில் முழுமையாகச் சரிவு ஏற்படவில்லை என வருத்தம் தெரிவித்துள்ளார்.
• கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட ஸ்பெயினில் தொடக்கநிலையை படிப்படியாகக் குறைத்து வருகின்றனர். அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சி தடைப்பட்டு நிற்பதாலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
• கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மருத்துவர்களின் சடலத்தை புதைக்க அனுமதிக்காமல் எகிப்தில் நைல் நதிக்கரைக்கு அருகாமையில் வசிக்கும் மக்கள் தடை கோரினர். கொரோனாவால் உயிரிழப்போரின் சடலத்தை புதைத்தால் அந்த கிராமம் முழுவதும் தொற்று பரவும் என அவர்கள் நம்பினார்கள். சடலங்களை புதைக்க மறுத்த குற்றத்திற்காக 23 பேரை எகிப்து காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தை அந்நாட்டு பிரதமர் ”அவமதிக்க தக்க இழிவான” சம்பவம் என குறிப்பிட்டுள்ளார்.
• கனடாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களில் பாதி பேர் முதியோர் காப்பகங்களில் வசிப்பவர்கள் என தெரியவந்துள்ளது. கனடாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,000த்தை நெருங்கியுள்ளது.
• வடக்கு நெதர்லாந்தில் உள்ள தீ அணைப்பு வீரர்கள் பலருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த வாரம் வரை 137 தீ அணைப்பு வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர் என அந்நாட்டு அதிகாரிகள் உறுதி செய்கின்றனர்.
BBC.TAMIL

























