வாஷிங்டன் : சீனா, சிறிய அளவிலான அணு ஆயுத சோதனையை, பூமிக்கடியில் நடத்தியதாக, அமெரிக்கா குற்றம்சாட்டி உள்ளது.
‘சிறிய அளவிலான அணு ஆயுத சோதனையை, பூமிக்கு அடியில் சீனா நடத்தி இருக்கலாம்’ என, அமெரிக்க வெளியுறவுத்துறை குற்றம்சாட்டி உள்ளது. இது குறித்து, அமெரிக்காவின், ‘வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ இதழ், முதன் முதலாக, செய்தி வெளியிட்டுள்ளது. அதில், ‘சீனாவின் ஹுபே மாகாணத்தில் உள்ள வூஹானில் கடந்த ஆண்டு டிசம்பரில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் பரவலை, சீனா தவறாக கையாண்டதாக, அமெரிக்கா ஏற்கனவே குற்றம்சாட்டி வருகிறது. ‘இதனால், அமெரிக்கா — சீனா இடையிலான உறவு, மோசமடைந்துள்ள நிலையில், பூமிக்கு அடியில், சீனா நடத்தியுள்ள, சிறிய அளவிலான அணு ஆயுத சோதனை, இரு நாட்டு உறவுகளை, மேலும் பாதித்துள்ளது’ என,குறிப்பிட்டுள்ளது.
இதற்கு பதில் அளித்த, சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர், ஜாவோ லிஜியன் கூறியதாவது:அணுசக்தி சோதனைகள் தொடர்பான தடையை மதிக்க வேண்டும் என, சீனா உறுதிகொண்டுள்ளது. இது தொடர்பாக, அமெரிக்கா முன் வைக்கும் குற்றச்சாட்டு, அடிப்படை ஆதாரமற்றது.சீனா, எப்போதுமே, பொறுப்பான அணுகுமுறையை கடைப்பிடித்துவருகிறது. சர்வதேச கடமைகளை ஏற்று, அளித்த வாக்குறுதிகளை தவறாமல் நிறைவேற்றி வருகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.
dinamalar