கட்டுப்பாடுகளை தளர்த்துவதில் அவசரம் வேண்டாம்

நியூயார்க் : ‘கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்துவதில் அவசரம் காட்ட வேண்டாம்; இது, கொரோனா வைரஸ், மீண்டும் முழு வீச்சில் பரவுவதற்கு வழி வகுத்து விடும்’ என, சர்வதேச நாடுகளுக்கு, உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

உலக சுகாதார நிறுவனத்தின், மேற்கு பசிபிக் பிராந்தியத்தின் இயக்குனர், டகேஷி கசாய் கூறியதாவது:கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளன. மக்கள், சுதந்திரமாக நடமாடுவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.கடைகள், வர்த்தக நிறுவனங்கள் அடைக்கப்பட்டுள்ளன. தியேட்டர், சுற்றுலா தலங்கள் மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில், ஒரு சில நாடுகளில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதை அடுத்து, கட்டுப்பாடுகள் அவசர கதியில் தளர்த்தப்பட்டு வருகின்றன. அமெரிக்காவின் பல மாகாணங்களில், கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. கனரக தொழில்கள் இயங்கவும் சில மாகாணங்களில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பாவின் சில நாடுகளிலும் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டு வருகிறது. ஆஸ்திரேலியாவில், தற்போது அவசர கால மருத்துவ சேவைகள் மட்டுமே இயங்கி வருகின்றன. ஆனால், அடுத்த சில நாட்களில், அனைத்து மருத்துவ சேவைகளும் இயங்க அனுமதி அளிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. வேலை வாய்ப்பின்மை அதிகரிக்கும், பொருளாதார வீழ்ச்சி கடும் சரிவை சந்திக்கும் என்ற அச்சம் காரணமாக, பல நாடுகள் கட்டுப்பாடுகளை தளர்த்த திட்டமிட்டுள்ளன; இதில், அரசியல் ரீதியான காரணங்களும் உள்ளன.

அமெரிக்காவின் பல மாகாணங்களில், ஊரடங்கிற்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்துவதால், கட்டுப்பாடுகளை தளர்த்துவதில் அவசரம் காட்டப்படுகிறது. ஆனால், சர்வதேச நாடுகளில் இந்த அவசரம், எதிர்காலத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தி விடும். கொரோனா வைரஸ், மீண்டும் முழு வீச்சில் பரவுவதற்கு வாய்ப்பை ஏற்படுத்தி விடும். கட்டுப்பாடுகளை, வைரஸ் பாதிப்பின் தாக்கத்தின் அடிப்படையில் படிப்படியாக தளர்த்துவதே சரியாக இருக்கும்.முழுமையாக தளர்த்தினால், சுற்றுலா தலங்கள், ஷாப்பிங் மால் போன்றவற்றில் மக்கள் அதிக அளவில் கூடுவர். சமூக விலகல் கேள்விக்குறியாகி விடும். முழு வீச்சில் வைரஸ் பரவுவதற்கு, இது, காரணமாக அமைந்து விடும். மீண்டும் வைரஸ் பரவினால், அது, மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

dinamalar