மக்கள் தேர்ந்தெடுக்காத அரசாங்கம் நாட்டை சீர்குலைக்கும் – சேவியர் ஜெயக்குமார்

பல திட்டங்களின் வழி நாட்டு மக்களைக் காக்கப் பக்காத்தான் ஹராப்பான் அரசு கவனமாக வடிவமைத்து உழைத்து வந்த நேரத்தில், அனைத்தையும் தவிடு பொடியாக்கும் விதமாக அரசியல் சதியில் இறங்கிய டான்ஸ்ரீ மொகிதீன் யாசினின் பாக்காத்தான் நேசனல், மக்கள் தேர்ந்தெடுக்காத அரசாங்கத்தை அமைத்தனர்.

குறுக்கு வழியில் வந்த இந்த சந்தர்ப்பவாதி அரசியல் கும்பல் இப்போது நாம் இருக்கும் இக்கட்டான சூழலிலும் அரசியல் ஆதாயத்தை தேடுவதில் மும்முரமாக உள்ளனர் என்கிறார் கெஅடிலான் கட்சியின் தேசிய உதவித் தலைவரும், கோல லங்காட் நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.

கோவிட்-19-ன் தாக்கம் நமது நாட்டின் பொருளாதாரத்தை கடுமையாக தாக்கும். அதோடு பலத்த சரிவடைந்துள்ள பெட்ரோலியம் கச்சா எண்ணெய் நமது நாட்டின் வருமானத்தை மேலும் குறைக்கும். மக்கள் வேலகளை இழப்பர், வருமானம் தடைபடும். நாட்டின் கடன் அதிகரிக்கும். நாட்டு மக்கள், குறிப்பாக குறைந்த வருமானம் பெறுபவர்களும், நடுத்தர வருமானம் பெறுபவர்களும் பெரும் பாதிப்புக்கு ஆளாவர். அடுத்த ஆண்டு முதல் வேலை வாய்ப்புகள் வெகுவாக குறையும்.

உலக அளவில் இது போன்ற தாக்கங்கள் பரவலாக இருந்தாலும், நமது நாட்டின் பொருளாதார சூழலை ஒருமித்த அளவில் காப்பாற்ற நாட்டு மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து நாட்டுப்பற்றுடன் செயலாற்ற வேண்டும். இனம், மதம், மொழி என்ற வேறுபாடு காணாமல் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

பாக்காத்தான் நேசனல் அவ்வகையில் செயலாற்ற இயலுமா? அது அப்படி செயலாற்றுவதற்கு மக்களின் ஆதரவுதான் கிடைக்குமா? என்று வினவுகிறார் சேவியர்.

“சந்தர்ப்பவாத அரசியல் கும்பல் களவாடிய அரசாங்கத்தை, ஆதரிக்க மக்கள் முன்வர வேண்டும் என்றால் அவர்கள் முதலில் மக்கள் பிரதிநிதிகளாக இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களையாவது சந்தித்து பேச வேண்டும். ஆனால், அவர்களுக்கு அது தேவையற்றதாக தோன்றுகிறது” என்கிறார் சேவியர்.

அடுத்த மாதம் 18ஆம் தேதி நாடாளுமன்றம் கூட உள்ளது. விவாதங்கள் அனுமதிக்கப்படாத அந்தக் கூட்டம் ஒரு நாள் மட்டுமே நடைபெறும். இதை வன்மையாக சாடும் சேவியர், “சனநாயக அரசியலுக்கு இது பலத்த அவமானம், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருந்தால்தான் அரசாங்கத்தை அமைக்க இயலும். இந்த களவாடப்பட்ட அரசாங்கத்தை மக்கள் நம்ப வேண்டும் என்றால் முதலில் அவர்கள் தங்களின்  பெரும்பான்மையை நிருபிக்க வேண்டும்.” என்கிறார்.

இவர்கள் தங்களின் அரசியல் சுகத்திற்காக ஆட்சி அமைத்து அதில் ஆதரவு பெறுவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களை பதவிகள் வழி தன்வசப்படுத்தி சுயநல போக்குடன் சொகுசாக ஆட்சியில் இருக்க முற்படும் இவர்களை எப்படி மக்கள் நம்புவார்கள்.

பல்லின மக்களின் தேசமாக இருக்கும் நாட்டில் இனவாதமும் மதவாதமும் வேரூண்டுவதற்கு சாதகமான வகையில்தான் இந்த அம்னோ, பாஸ், உள்ளிட்ட பாக்காத்தான் நேசனல் அரசாங்கம் செயல்பட்டு வருவதாக தெரிகிறது.

இன்று மக்களின் அன்றாட உணவு தேவைக்கு வீட்டிற்கு வெளியே அல்லல் படும் மக்களைத் தண்டிக்க, நடமாட்டக் கட்டு பாடு விதிகளைக் காரணமாகக் காட்டுவது  சரியான வழிமுறையல்ல. கடந்த மாதம் மார்ச் 18 முதல் ஏப்ரல் 14 வரையில் சுமார் 15,000 நபர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், இதில் கணிசமானவர்கள் இந்தியர்கள் என்றும் தோன்றுகிறது. அதே வேளையில் இந்த கைது நடவடிக்கை பாரபட்சமில்லாமல் இல்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.

இன்று மக்களின் அன்றாட உணவு தேவைக்கு வீட்டிற்கு வெளியே அல்லல் படும் மக்களைத் தண்டிக்க, நடமாட்டக் கட்டு பாடு விதிகளைக் காரணமாகக் காட்டுவது  சரியான வழிமுறையல்ல, நாட்டில் அதிகமானோர் கைது செய்யப்பட்டுத் தண்டிக்கப்படுவது அரசாங்கத்தின் அணுகு முறையில் உள்ள பலவீனங்களையே காட்டுவதாகவுள்ளது என்கிறார் டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.