கோவிட்-19: மேலும் 71 பாதிப்புகள், இரண்டு இறப்புகள், 90 நோயாளிகள் குணமடைந்துள்ளனர்

மலேசியாவில் 71 புதிய கோவிட்-19 நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன. இப்போது மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 5,603 ஆக உள்ளது.

இன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில், சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா மேலும் 90 நோயாளிகள் குணமடைந்துள்ளதாக அறிவித்தார். இதனால் குணமடைந்தவர்கள் மொத்தம் 3,542 அல்லது 63.2 சதவீதமாக உள்ளனர்.

நாட்டில் 1,966 செயலில் உள்ள கோவிட்-19 பாதிப்புகள் உள்ளன. பதிவான 71 புதிய பாதிப்புகளில் 19 இறக்குமதி பாதிப்புகள் மற்றும் 52 உள்ளூர் நோய்த்தொற்றுகள் ஆகும்.

தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ) 42 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகின்றது. அவர்களில் 21 பேருக்கு சுவாச உதவி தேவைப்படுகிறது.

இதற்கிடையில், இன்று இரண்டு புதிய இறப்புகள் பதிவாகியுள்ளன. அதில் ஒரு சுகாதார அமைச்சின் ஊழியரும் அடங்குவார்.

இதுவரை மலேசியாவில் கோவிட்-19 பாதிப்பினால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 95 ஆக உள்ளது.

94-வது இறப்பு (‘நோயாளி 3871’) உயர் இரத்த அழுத்த வரலாற்றைக் கொண்ட 32 வயதான மலேசிய நபர். அவர் சுகாதார அமைச்சு மருத்துவக் குழுவில் உறுப்பினராக உள்ளார். மேலும் கோவிட்-19 நேர்மறை பாதிப்பான ‘நோயாளி 3662’ (ஜோகூர் முவாரில் ஏற்பட்ட மருத்துவமனை கிளஸ்டர் தொடர்பானது) உடன் நெருங்கிய தொடர்பு வரலாற்றைக் கொண்டுள்ளார்.. ஏப்ரல் 6, 2020 அன்று ஜோகூரின் என்சே ‘ஹஜ்ஜா கல்சோம் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், ஏப்ரல் 23, 2020 அன்று மதியம் 12.36 மணிக்கு இறந்துவிட்டார். சுகாதார ஊழியர்களிடையே இது மூன்றாவது இறப்பு எண்ணிக்கை ஆகும்.

95-வது இறப்பு (‘நோயாளி 4129’) நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், இதய நோய் மற்றும் சிறுநீரக நோய் ஆகியவற்றின் பின்னணியைக் கொண்ட 67 வயதான மலேசிய நபர். COVID-19 நேர்மறை பாதிப்புக்குள்ளான ‘நோயாளி 1575’ (பாலி கிளஸ்டருடன் தொடர்புடையது) உடன் அவருக்கு நெருங்கிய தொடர்பு வரலாறு இருந்தது. ஏப்ரல் 8, 2020 அன்று பகாங்கில் உள்ள தெங்கு அம்புவான் அப்சான் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், ஏப்ரல் 22, 2020 அன்று இரவு 11.48 மணிக்கு இறந்துவிட்டார்.