நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு மேலும் இரு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டது

நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு 12 மே 2020 வரை மேலும் இரு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டது என்று பிரதமர் முகிதீன் யாசின் இன்று தொலைக்காட்சியில் தன் சிறப்பு செய்தியில் தெரிவித்தார்.

மார்ச் 18 அன்று தொடங்கிய நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு, ஏப்ரல் 28 ஆம் தேதியுடன் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த உத்தரவு இப்போது மூன்றாவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

நோம்புப் பெருநாள் வரை நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு மேலும் நீட்டிக்க வாய்ப்புள்ளது என்பதையும் முகிதீன் எடுத்துரைத்தார்.

“நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு மேலும் நீட்டிக்கப்படுவதற்கான வாய்ப்பை நான் நிராகரிக்கவில்லை. விடுமுறையை கிராமத்தில் நீங்கள் கொண்டாட முடியாமலும் போகலாம்”.

“அனுமதிக்கப்பட்ட துறையில் பணிபுரிபவர்களைத் தவிர, பிறர் இன்னும் வேலை செய்ய முடியாது. வணிகம் இன்னும் முழுமையாக திறக்கப்படாது,” என்று அவர் கூறினார்.

எவ்வாறாயினும், கோவிட்-19 பாதிப்பு தொடர்ந்து குறிப்பிடத்தக்க சரிவைப் பதிவுசெய்தால், சமூகத் துறை உட்பட பல துறைகள் மீதான கட்டுப்பாட்டை அரசாங்கம் படிப்படியாகக் குறைக்கும் என்று பிரதமர் கூறினார்.

இருப்பினும் சில தளர்வுகள் வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்தார். எவ்வாறாயினும், இது “சிறிய தளர்வு” மட்டுமே என்றும் மேல் விவரங்கள் எதிர்காலத்தில் அறிவிக்கப்படும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இன்றிரவு தனது சிறப்பு செய்தியில், முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் வெளியிட்ட அறிவிப்பையும் முகிதீன் மீண்டும் வழியுறுத்தினார்.

நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பிய மக்கள் இப்போது தங்கள் வீடுகளுக்குத் திரும்ப விரும்பினால், இந்த நோக்கத்திற்காக அவர்கள் இணைய விண்ணப்பத்தைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம் என்றும் அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்திலும் விண்ணப்பிக்கலாம் என்றும் கூறினார்.

அதோடு, இன்னும் தங்களின் உயர்கல்வி வளாகத்தில் உள்ள மாணவர்கள் தங்களின் வீடுகளுக்குத் திரும்ப அனுமதி கூடிய விரைவில் அளிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் கூறினார். மாணவர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப அனுமதிக்கும் முடிவு ஏற்பட்டால், அது முறையாகவும் பாதுகாப்பாகவும் செய்யப்பட வேண்டும் என்றார்.

வீடு திரும்பும் முன் உடல்நிலை சீராகவும், நோய் அறிகுறி இன்றியும் இருக்க வேண்டியது அவசியம்  என்றும் அவர் கூறினார்.

“இந்த இரண்டு நடவடிக்கைகளையும் செயல்படுத்துவது குறித்து ஆராயப்படும். கோவிட்-19 ஐ எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகளைப் பாதிக்கக்கூடாது” என்றும் இது குறித்து மேல் விவரங்கள் கூடிய விரைவில் அறிவிக்கப்படும்அவர் கூறினார்.