ஜெனீவா:’கொரோனா வைரஸ் பாதிப்பு, குறைந்துள்ளதாக கருத வேண்டாம். தற்போது, முதல் கட்டத்தில் தான் இருக்கிறோம். இந்த வைரஸ் பாதிப்பு, நீண்ட காலம் இருக்கும்’ என, உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.’
கொரோனா வைரஸ் விவகாரத்தில், உலக சுகாதார அமைப்பு முறையாக செயல்படவில்லை; சீனாவுக்கு ஆதரவாக செயல்படுகிறது’ என, அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார். அந்த அமைப்புக்கான நிதியையும் அவர் நிறுத்தியுள்ளார். அதன் தலைவர், டெட்ராஸ் அதனோம் கேப்ரியாசெஸ் பதவி விலக வேண்டும் என்றும், அமெரிக்க எம்.பி.,க்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், உலக சுகாதார அமைப்பின் தலைவர், டெட்ராஸ், ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது:மேற்கு ஐரோப்பிய நாடுகள் உட்பட பல நாடுகளில், வைரஸ் பாதிப்பு குறைந்து வருவதாக தெரிகிறது. அதேபோல், எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், ஆப்ரிக்கா, மத்திய மற்றும் தென் அமெரிக்க நாடுகள் மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில், பாதிப்பு உயர்ந்து வருகிறது.
பெரும்பாலான நாடுகள், வைரஸ் பாதிப்பின் முதல் கட்டத்திலேயே உள்ளன. முதன் முதலில் பாதிக்கப்பட்ட நாடுகளில், தற்போது மீண்டும் பாதிப்பு துவங்கி உள்ளது.யாரும் தவறு செய்ய வேண்டாம். நாம் இன்னும் நிறைய துாரம் செல்ல வேண்டியுள்ளது. இந்த வைரஸ், நீண்ட காலம் இருக்கும்.இந்த வைரஸ் விவகாரத்தில், சரியாக செயல்படவில்லை என்று எங்கள் மீது குறை கூறுகின்றனர். இந்தாண்டு, ஜன., 30ல், அவசரநிலையை எச்சரித்தோம். தடுக்க நடவடிக்கை எடுக்க, உலக நாடுகளுக்கு போதுமான நேரம் இருந்தது.
பதவி விலக மறுப்பு
நான் பதவி விலக வேண்டும் என, அமெரிக்கா கூறி வருகிறது. நான் பதவி விலக வேண்டிய அவசியமில்லை. நாங்கள் சரியான நேரத்தில் எச்சரித்தோம். ஆனால், உலக நாடுகள் அதை ஏற்று உடனே செயல்படவில்லை.அமைப்புக்கு நிதியை நிறுத்தும் முடிவை, அமெரிக்கா திரும்பப் பெற வேண்டும். இது ஒரு முதலீடு. மற்றவர்களுக்கு மட்டும் உதவவில்லை, அமெரிக்கா தன்னைத் தானே பாதுகாக்க, நிதியை அளிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.
dinamalar