50 ஆயிரத்தை நெருங்கிய பலி எண்ணிக்கை – அதிர்ச்சியில் அமெரிக்கா

அமெரிக்காவில் கொரோனாவுக்கு நேற்று ஒரே நாளில் 2 ஆயிரத்து 292 பேர் பலியாகினர். இதனால் அங்கு வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 50 ஆயிரத்தை நெருங்கியது.

நியூயார்க்: உலகம் முழுவதும் 210 நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில் வைரஸ் தாக்குதலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

தற்போதைய நிலவரப்படி, 27 லட்சத்து 15 ஆயிரத்து 713 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரசின்  தாக்குதலுக்கு உலகம் முழுவதும் இதுவரை ஒரு லட்சத்து 90 ஆயிரத்து 465 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கிடையில், சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் ஐரோப்பிய நாடுகளை தொடர்ந்து தற்போது அமெரிக்காவில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது.

வைரஸ் பரவியவர்கள் மற்றும் பலி எண்ணிக்கையில் உலக அளவில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில், அமெரிக்காவில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 50 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

தற்போதைய நிலவரப்படி, அந்நாட்டில் 8 லட்சத்து 79 ஆயிரத்து 529 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. குறிப்பாக நேற்று ஒரே நாளில் புதிதாக 30 ஆயிரத்து 812 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வைரஸ் பரவியவர்களில் இதுவரை 85 ஆயிரத்து 624 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

ஆனால், அங்கு வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் 2 ஆயிரத்து 292 பேர் பலியாகியுள்ளனர். இதனால் அமெரிக்காவில் கொரோனாவுக்கு  உயிரிழந்தோர் எண்ணிக்கை 49 ஆயிரத்து 812 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவுக்கு அமெரிக்காவில் பலியானோர் எண்ணிக்கை 50 ஆயிரத்தை நெருங்கியுள்ளதால் அந்நாட்டு மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

malaimalar