10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ராணுவத்துக்கு அதிகம் செலவிட்ட உலக நாடுகள்

கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த ஆண்டு ராணுவத்துக்கு உலக நாடுகள் அதிகம் செலவிட்டுள்ளன. இதில், இந்தியாவுக்கு 3-வது இடம் கிடைத்துள்ளது.

லண்டன்: சுவீடன் நாட்டின் ஸ்டாக்ஹோம் நகரை சேர்ந்த ‘சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம்‘ என்ற அமைப்பு, உலக நாடுகள் கடந்த 10 ஆண்டுகளில் தங்கள் ராணுவத்துக்கு செலவிட்ட தொகை பற்றிய புள்ளிவிவரங்கள் அடிப்படையில் ஒரு ஆய்வை வெளியிட்டுள்ளது.

அதன்படி, கடந்த ஆண்டு, உலக நாடுகளின் மொத்த

செலவு, ஒரு லட்சத்து 91 ஆயிரத்து 700 கோடி டாலராக இருந்தது. இது, முந்தைய ஆண்டை விட 3.6 சதவீதம் அதிகம் ஆகும்.

கடந்த 2010-ம் ஆண்டில் இருந்து உலக நாடுகள் ஆண்டுதோறும் ராணுவத்துக்கு செலவிட்ட தொகையில் இதுவே அதிகம். இது, கடந்த ஆண்டின் உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.2 சதவீதம்.

வழக்கம்போல், 2019-ம் ஆண்டில், அமெரிக்காதான் ராணுவத்துக்கு அதிகமாக செலவிட்டதில் முதலிடம் பிடித்துள்ளது. அந்நாடு, 73 ஆயிரத்து 200 கோடி டாலர் செலவிட்டுள்ளது. இது, முந்தைய ஆண்டை விட 5.6 சதவீதம் அதிகம். அது மட்டுமல்ல, உலக நாடுகளின் மொத்த ராணுவ செலவில் 38 சதவீதம்.

சீனா, 26 ஆயிரத்து 100 கோடி டாலர் செலவிட்டு, இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. இது, முந்தைய ஆண்டை விட 5.1 சதவீதம் அதிகம்.

இந்தியா, 7 ஆயிரத்து 110 கோடி டாலர் (ரூ.5 லட்சத்து 40 ஆயிரத்து 360 கோடி) செலவிட்டு 3-வது இடத்தை பிடித்துள்ளது. இது, முந்தைய ஆண்டை விட 6.8 சதவீதம் அதிகம்.

‘சீனா, பாகிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளின் மோதல்போக்கே இந்தியாவின் ராணுவ செலவு அதிகரிக்க காரணம்“ என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ரஷியா, சவுதி அரேபியா ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன. ஜெர்மனியின் ராணுவ செலவு, முந்தைய ஆண்டை விட 10 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆனால், இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகள், முந்தைய தொகையையே செலவிட்டுள்ளன.

malaimalar