மெக்சிகோ நாட்டில் ஒரே மாதத்தில் ஊரடங்கின்போது மாபியா குழுக்கள் மோதலில் 3 ஆயிரம் பேர் படுகொலை

மெக்சிகோ நாட்டில் கொரோனா ஊரடங்கின்போது மாபியா குழுக்களுக்கு இடையே நடந்த பயங்கர மோதலில் ஒரே மாதத்தில் 3 ஆயிரம் பேர் படுகொலை செய்யப்பட்டிருப்பது, தெரிய வந்துள்ளது.

மெக்சிகோ சிட்டி, போதை பொருள் கடத்தலில் ஈடுபடும் மாபியா குழுக்கள் அதிகம் நிறைந்த நாடுகளில் வட அமெரிக்க நாடான மெக்சிகோ முதலிடம் வகிக்கிறது. பிரிக்க முடியாதது எதுவோ? என்று கேட்டால் மெக்சிகோவும், அங்குள்ள மாபியா குழுக்களும்தான் எனக் கூறும் அளவிற்கு மெக்சிகோ புகழ்பெற்றது.

சுமார் 13 கோடி மக்கள் தொகை கொண்ட அந்நாட்டில் 20-க்கும் மேற்பட்ட மாபியா குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இவை ஒவ்வொன்றிலும் சுமார் 350 முதல் 400 தாதாக்கள் உள்ளனர். இவர்கள் தவிர, ஒவ்வொரு குழுவிலும் 900 பேர் வரை உறுப்பினர்களும் இருக்கின்றனர். இந்த உறுப்பினர்களின் வேலையே போதை மருந்து பயிர்களை சாகுபடி செய்து அதை தங்கள் குழுக்களின் தாதாக்களிடம் ஒப்படைப்பதுதான்.இந்த தொழில் போட்டியில் போதை மருந்து கடத்தலில் ஈடுபடும் மாபியா குழுக்களுக்கு இடையே துப்பாக்கி சண்டை, வெட்டுகுத்து நடக்காத நாளே கிடையாது.

இந்த நிலையில்தான், ரத்தம் குடிக்கும் காட்டேரியாக உலகில் உலா வரும் கொரோனா வைரஸ் கடந்த பிப்ரவரி மாத இறுதியில் மெக்சிகோவுக்குள் புகுந்து கடந்த மாதம் வேகம் பிடித்தது. இதனால் மெக்சிகோ அதிபர் லோபஸ் ஓப்ரடார் ஒரு மாத கால ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார்.

கொரோனா தாக்குதல் மற்றும் ஊரடங்கு காரணமாக ஒருவழியாக போதை மருந்து மாபியா குழுக்களுக்கு இடையேயான சண்டை ஓய்ந்துவிடும் என்றே எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அதற்கு நேர் மாறாக, இது பல்வேறு மாபியா குழுக்களுக்கு இடையேயான சண்டையை முன்பைவிட தீவிரம் அடையச் செய்து விட்டது.

வழக்கமாக, இந்த கடத்தல் குழுக்களை ஒடுக்குவதற்கு 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறப்பு ராணுவ வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.ஆனால், இவர்களில் 18 ஆயிரம் பேர் தற்போது கொரோனா தடுப்பு பணி பாதுகாப்பிற்காக அனுப்பி வைக்கப்பட்டு விட்டனர். இதனால் 4 ஆயிரம் வீரர்கள் மட்டுமே மாபியா குழுக்களின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.

இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு மாபியா குழுக்கள் தங்களுக்கு இடையே நாடு முழுவதும் ஆங்காங்கே பயங்கர மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சண்டையில் கடந்த மாதம் மட்டும் 3 ஆயிரம் பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.

மெக்சிகோவில் கடந்த 2 ஆண்டுகளில் ஒரே மாதத்தில் மாபியா குழுக்களைச் சேர்ந்த இவ்வளவு பேர் படுகொலை செய்யப்பட்டதில்லை.

இதுபற்றி வேதனை தெரிவித்துள்ள அதிபர் ஓப்ரடார், “நாடு கொரோனாவின் பிடியில் சிக்கியுள்ள நேரத்திலும் கூட இவர்களின் சண்டை ஓயாதது பெரும் கவலை அளிக்கிறது“ என்று குறிப்பிட்டார்.

மெக்சிகோவில் கொரோனாவுக்கு 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டும் 1,434 பேர் உயிரிழந்தும் உள்ளனர், என்பது குறிப்பிடத்தக்கது.

dailythanthi