இராகவன் கருப்பையா – இந்நாட்டில் குண்டர் கும்பல், சண்டை, வெட்டு, குத்து, கொலை என்றாலே இந்தியர்கள்தான் என்ற முத்திரையை நாம் சுமந்து நிற்பது மிகவும் வேதனையான ஒரு விசயம்.
புள்ளி விபரங்களின்படி, அடையாளம் காணப்பட்ட குண்டர்கும்பல்களில் 72% இந்தியர்கள் என்றும் வன்மையான குற்றச்செயல்களில் 60% இந்தியர்கள் என்றும் 2019-இல் சைன்ஸ் அண்ட் வெல்னஸ் இயக்கம் வெளியிட்ட புள்ளிவிபர அட்ட வனை காட்டுகிறது.
மேலும் சுமார் 40% மாணவர்கள் கல்வியைத் தொடர்வதில்லை என்றும் மேலும் இதில் வருடத்திற்குச் சுமார் 10,000 மாணவர்கள் ஐந்தாம் படிவத்திற்கு முன்பே பள்ளியை விட்டு வெளியாகின்றனர் என்கிறது அந்த அறிக்கை.
இந்நிலையில், தற்போதைய கோவிட்-19 நடமாட்டக் கட்டுப்பாட்டின் போதும் நம் இனத்தவர்கள் புரியும் குற்றச் செயல்கள் அதிகளவே உள்ளது.
வெட்டு, குத்து, கொலை போன்ற கொடூரக் குற்றச்செயல்கள் இந்தக் காலக்கட்டத்தில் இல்லாவிட்டாலும், ஆங்காங்கே தேவையில்லாத, அர்த்தமில்லாத அடாவடித்தனத்தினால் சட்டத்தின் பிடியில் சிக்கிக்கொண்டுள்ளது நிலையை மேலும் மோசமாக்கியிரது.
கடந்த மாத இறுதியில் நடமாட்டக் கட்டுப்பாட்டை மீறி வெட்ட வெளியில் மதுபானம் அருந்திக்கொண்டிருந்த 5 பேர் போலீஸாரிடம் முரட்டுத் தனமாக நடந்துகொண்டதாகத் தெரிகிறது.
கோலாலம்பூருக்கு வெளியே நடந்த இச்சம்பவத்தில், கலைந்து செல்லுமாறு ஆலோசனை கூறிய 2 போலீஸ்காரர்கள் மீது அவர்கள் மதுபான டின்களை விட்டு எரிந்ததால் விசயம் விபரீதமானது. விளைவு, அவர்கள் அனைவருக்குமே தலா 3 மாதச் சிறைத்தண்டனை.
இம்மாத மத்தியில் பினாங்கில் நடந்த ஒரு சம்பவத்தில் 19 வயதிற்கும் 26 வயதிற்கும் இடைப்பட்ட 13 இளைஞர்கள் அடுக்கு மாடி வீடு ஒன்றில் பிறந்தநாள் கொண்டாட்டம் என்ற போர்வையில் மது அருந்தியது மட்டுமில்லாமல் அண்டை அயலாருக்கு இடைஞ்சலாக உரத்த இசையில் ஆடிப்பாடி அசத்தியதால் போலீஸார் வரவழைக்கப்பட்டனர்.
அதற்கு அடுத்த நாள் கிள்ளானுக்கு அருகில் நிகழ்ந்த ஒரு ஈமச்சடங்கின் போதும் தேவையில்லாத அடாவடித்தனம்.
அந்தப் பகுதி தொற்று நோயினால் பாதிக்கப்பட்ட பகுதி என ஏற்கெனவே பிரகடனப்படுத்தப்பட்டிருந்ததால், அதிக அளவில் கூட்டம் கூட வேண்டாம் என்றும் சீக்கிரமே கலைந்து செல்லுமாறும் போலீஸார் பலருக்கு ஆலோசனை கூறினர்.
ஆனால் சிலர் அதனைப் பிடிவாதமாகச் செவிசாய்க்க மறுத்ததால் போலீஸார் பிறகு அவர்களைக் கைது செய்யவேண்டிய நிலை ஏற்பட்டது. மரணமடைந்த இளைஞரின் தந்தை மீதும் 2 நாள் கழித்துக் குண்டர் கும்பல் தொடர்பான குற்றப்பதிவு செய்யப்பட்டது.
இந்நோய் பரவியுள்ள மற்றொரு பகுதியான ரவாங்கிலும் இதே நிலைதான். நடமாட்டக் கட்டுப்பாட்டையும் கூடல் இடைவெளியையும் மீறிப் பொது இடத்தில் மது அருந்திய 31 வயதிற்கும் 46 வயதிற்கும் இடைப்பட்ட 6 பேருக்கு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதியன்று தலா 1000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது.
கடந்த வாரத்தில் ஈப்போவில் உள்ள வாழையிலை உணவகம் ஒன்றில் மது அருந்தி உரத்த குரலில் ஆரவாரம் புரிந்த 10 பேர் மீதும் சட்டம் பாய்ந்தது. இந்த அராஜகத்திற்கு வழிவகுத்த அந்த உணவகத்தின் உரிமத்தையும் அதிகாரிகள் பிறகு ரத்து செய்தனர்.
இந்த நடமாட்டக் கட்டுப்பாடு அமலில் இருக்கும் இவ்வேளையில் நாடு தழுவிய நிலையில் இதுபோன்ற குற்றங்களைப் புரிவதில் நம் சமூகத்தினர் முன்னிலை வகிப்பது சைன்ஸ் அண்ட் வெல்னஸ் இயக்கம் வெளியிட்ட புள்ளிவிபர அட்ட வனையில் உள்ள தகவல்களை மெய்ப்பிப்பதாக எடுத்துக்கொள்ளலாம்.
1970-ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு தோட்டப்புறங்களில் இருந்து வெளியேற்றப்பட்டு ஒரு ஒடுக்கப்பட்ட சமுதாயமாகவும் ஓரங்கட்டப்பட்ட சமுதாயமாகவும் வாழும் சுமார் 40% இந்தியர்களுக்கு நாட்டின் வளர்ச்சி முழுமையான வாழ்வாதார உயர்வுக்கு உதவவில்லை.
குறைந்த வருமானம், கடன், கல்வியின்மை, இனவாத மற்றும் மதவாதக் கொள்கைகளால் புறக்கணிப்பு, ஏழ்மைநிலை பண்பாட்டு கூறுகள்போன்றவை அவர்களின் தாழ்வு நிலைக்கும் அதிலிருந்து வெளியாகும் வாய்ப்புகள் அற்ற சூழலில் வாழ்கின்றனர். 2007ஆம் ஆண்டு நவம்பர் 25இல் நடந்த ஹிண்ராப் பேரணி இந்தியர்களின் ஏக்கப்பெருமூச்சை வெளியிட்டது.
அதன் விளைவாக நாட்டின் கொள்கையில் இதுவரையில் எந்த வித மாற்றமும் இல்லை. சமுதாயச் சிக்கலைத் தீர்க்க அரசியல் தீர்வு எதுவும் இல்லை. அழும் குழந்தைக்கு மிட்டாய் கொடுப்பது போல் ஒரு சிறிய அளவு நிதி ஒதுக்கீட்டைக் கொடுத்துச் சமுதாய மாற்றத்தை எதிர்பார்க்க இயலாது.
குற்றச்செயல்களில் சிக்கிய இந்தியச் சமுதாயம் என்பது ஓர் ஒதுக்கப்பட்ட சமூகத்தின் அவலப் பிரதிபலிப்பாகும். இதற்கு நிவாரணமாகத் தேவைப்படுவது சிறைச்சாலைகள் அல்ல, இனம்-மதம் வேறுபாடற்ற வகையில் வறுமையை அகற்ற ஒரு சமூகப் பொருளாதார அரசியல் விழிப்புணர்ச்சியும் அதற்கேற்ற திட்டங்களும்.
வணக்கம். இங்கு சில தகவல்கள் தவறானவை ஆனால் நல்ல அறிக்கை. நன்றி (எவை என்று சுட்டிக்காட்டினால் திருத்திக்கொள்லலாம் – ஆர்)