பீஜிங்: சீனாவின், 10 மாகாணங்களில், கடந்த இரண்டு வாரங்களில், உள்ளூர் தொற்று பரவல் அதிகரித்துள்ளதை அடுத்து, மீண்டும் கொரோனா பரவும் ஆபத்து உள்ளதாக, தேசிய சுகாதாரக் கமிஷன் எச்சரித்துள்ளது.
சீனாவில், கொரோனா தொற்றுக்கு, 4,633 பேர் பலியாகி உள்ளனர். 82 ஆயிரத்து, 880 பேர், பாதிக்கப்பட்டுள்ளனர்; 481 பேர், சிகிச்சையில் உள்ளனர். வெளிநாடுகளில் இருந்து சீனா திரும்புபவர்கள் சிலருக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்படுகிறது. இந்நிலையில், சீனாவின் தேசிய சுகாதாரத்துறை கமிஷனின் செய்தி தொடர்பாளர் மீ பெங், செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:சீனாவில், நேற்று முன்தினம், மூன்று பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மூவருமே, வெளிநாட்டில் இருந்து சீனா திரும்பியவர்கள். காய்ச்சல், இருமல் போன்ற எந்த அறிகுறிகளுமே இல்லாமல், தொற்று கண்ட, 13 பேரில் இருவர், வெளிநாட்டில் இருந்து திரும்பியவர்கள்.நேற்று முன்தினம் மட்டும், 962 பேருக்கு, அறிகுறிகள் இன்றி, தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில், 98 பேர், வெளிநாட்டில் இருந்து திரும்பியவர்கள்.கடந்த, 14 நாட்களில், 10க்கும் மேற்பட்ட மாகாணங்களில், அறிகுறிகள் எதுவும் இன்றி, உள்ளூர் தொற்று பரவல் அதிகரித்துள்ளது. இதன் மூலம், கொரோனா வைரஸ் இன்னும் நிலை கொண்டு ள்ளது தெரிகிறது. அது மீண்டும் பரவத் துவங்கும் அபாயமும் உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.
கொரோனாவின் தீவிர தன்மை குறித்து, வேண்டுமென்ற மற்ற நாடுகளை எச்சரிக்க, சீனா தவறி விட்டதாக, அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. தங்கள் நாட்டில் இருந்து மருந்து பொருட்களின் ஏற்றுமதியை குறைத்தும், இறக்குமதியை அதிகரித்தும் சீனா சதி செய்து விட்டதாக, அமெரிக்க உளவுத் துறை குற்றம் சாட்டியுள்ளது.
malaimalar