அலோர் செட்டாரில் பாஸ், அம்னோ இரகசிய கூட்டம்

பாஸ் மூத்த தலைவர்களிடையே ஒரு இரகசிய கூட்டம் இன்று அலோர் செட்டாரில் நடந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

இது குறித்து அதிக தகவல்கள் இல்லை என்றாலும், இக்கூட்டத்தில் பாஸ் பொதுச்செயலாளர் தக்கியுதீன் ஹசான், கெடா பாஸ் ஆணையர் அகமட் யஹாயா மற்றும் கட்சியின் மத்திய குழு உறுப்பினரும் எதிர்க்கட்சித் தலைவருமான முகமது சனுசி மாட் நோர் உட்பட்டோர் கலந்து கொண்டதாகத் தெரிகிறது.

கெடா பாஸ் வளாகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அனைத்து 15 பாஸ் சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டதாக தெரிகிறது.

மதியம் பாஸ் துணைத் தலைவர் டாக்டர் அகமட் சம்சூரி மொக்தார், கெடா அம்னோ தலைவர் ஜமீல் கிர் பஹாரோம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த வளர்ச்சி, அம்னோ மற்றும் பாஸ் கட்சிகள், மாநில அரசாங்கத்தை கைப்பற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றிய ஊகங்களைத் தூண்டியுள்ளது. கெடா இப்போது பெர்சத்து கட்டுப்பாட்டில் உள்ளது.

மற்ற மாநிலங்களைப் போலல்லாமல், கெடா தொடர்ந்து பாக்காத்தானுடன் ஒத்துழைத்து வருகிறது. ஷெரட்டன் நகர்வுக்கு முன்பு இருந்ததைப் போலவே அரசாங்கத் தலைமையும் நிலைத்திருக்கிறது.

கெடா மந்திரி புசாராக முக்ரிஸ் மகாதீர், அம்னோவுடன் இணையும் முகிதீன் யாசின் முயற்சியை நிராகரிக்கும் நிலைப்பாட்டை எடுத்துளார்.

பாஸ் 15 இடங்களைக் கொண்ட கட்சியா உள்ளது. பி.கே.ஆருக்கு ஏழு இடங்களும், பெர்சத்து (ஆறு) மற்றும் அமானா (நான்கு), டிஏபி மற்றும் பி.என்.-க்கு தலா இரண்டு இடங்களும் உள்ளன.

அகமட்டின் கூற்றுப்படி, கெடா மாநிலத்தில் உள்ள பெர்சத்து சட்டமன்ற உறுப்பினர்களிடையே முக்ரிஸுக்கு இப்போது பாதிக்கும் குறைவான ஆதரவே கிடைத்துள்ளது என்கிறார்.

தாக்கியுதீன் மற்றும் பென்டாங் நாடாளுமன்ற உறுப்பினர் அவாங் ஹாஷிம் ஆகியோர் கெடா காவல்துறைத் தலைவர் ஜைனுதீன் யாகோபுடன் அலோர் செட்டாரில் சந்தித்ததாகவும் நேற்று செய்தி வெளியிட்டுள்ளது.