சூடு பிடிக்கிறது அமெரிக்க அதிபர் தேர்தல்; களம் இறங்குகிறார் ஒபாமா

வாஷிங்டன்: இந்தாண்டு இறுதியில் நடக்கவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் ஜோ பிடனுக்கு ஆதரவாக தீவிரமாக பிரசாரம் செய்வது என, முன்னாள் அதிபர் ஒபாமா முடிவு செய்துள்ளார். இதற்கான ஏற்பாடுகளை ஜனநாயக கட்சியினர் தீவிரமாக செய்து வருகின்றனர்.

விமர்சனம்: அமெரிக்க அதிபர் தேர்தல், வரும் நவம்பரில் துவங்குகிறது. ஆளும் குடியரசு கட்சி சார்பில், தற்போதைய அதிபர் டிரம்ப், மீண்டும் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி சார்பில், முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் போட்டியிடுகிறார். கொரோனா பிரச்னையால், அதிபர் தேர்தல் பற்றிய விஷயங்கள் அதிகம் பேசப்படாத நிலையிலும், இரண்டு கட்சியினருமே, இப்போதே பிரசாரத்தை துவக்கி விட்டனர்.

தற்போதைய அதிபர் டிரம்ப், முன்னாள் அதிபர் ஒபாமாவையும், தற்போதைய போட்டியாளர் ஜோ பிடனையும், தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகிறார். கடந்த அதிபர் தேர்தலில், தான் வெற்றி பெற்றதற்கு, ரஷ்யாவின் தலையீடு இருந்ததாக, ஒபாமாவும், அவரது ஆதரவாளர்களும் பொய் பிரசாரம் செய்து வருவதாகவும் கூறி வருகிறார். ஒபாமா அதிபராக இருந்த போது அறிவித்த காப்பீட்டு திட்டத்தில், முறைகேடு நடந்ததாகவும் விமர்சித்து வருகிறார்.

இந்நிலையில், ‘அமெரிக்காவில் கொரோனாவால் அதிக பாதிப்பு ஏற்பட்டதற்கு, அதிபர் டிரம்பின் தவறான செயல்பாடுகள் தான் காரணம்’ என, ஒபாமா, சமீபத்தில் கூறியிருந்தார்; இதற்கு, அமெரிக்க மக்களிடையே வரவேற்பு அதிகம் இருந்தது.

நெருக்கடி: இதையடுத்து, அதிபர் தேர்தலில், ஜோ பிடனுக்கு ஆதரவாக, ஒபாமாவை தீவிர பிரசாரத்தில் ஈடுபடுத்த, ஜனநாயக கட்சியினர் முடிவு செய்து உள்ளனர். அமெரிக்காவில் வசிக்கும் இளைஞர்களிடமும், கறுப்பின மக்களிடமும், ஒபாமாவுக்கு அதிக ஆதரவு உள்ளது. இந்த ஆதரவை ஓட்டுகளாக மாற்றி, டிரம்புக்கு நெருக்கடியை ஏற்படுத்த, ஜனநாயக கட்சியினர் திட்டமிட்டு உள்ளனர்.

dinamalar