திக்கற்றத் திசையில் மலேசிய ஜனநாயகம்! – இராகவன் கருப்பையா

நம் நாட்டின் வரலாற்றிலேயே ஜனநாயகம் இந்த அளவுக்கு மிக மோசமாக பந்தாடப்படுவது இதுதான் முதல்முறையாக இருக்கக்கூடும்.

கடந்த 2018ஆம் ஆண்டு மே 9ஆம் தேதி நாடு முழுவதிலும் வெயிலென்றும் மழையென்றும் பாராமல் மணிக்கணக்கில் உற்சாகமாக வரிசை பிடித்து நின்று தங்களுடைய ஜனநாயகக் கடமையை நிறைவேற்றிய மக்களுக்கு அழுக்கான அரசியலின் சுயரூபத்தைக் காட்டுகின்றனர் சில அரசியல்வாதிகள்.

கோடிக்கணக்கான பணத்திற்கும் அளவற்ற சுகபோகங்களுக்கும் சோரம் போகும் வகையில் தங்களை ஒரு வியாபாரப் பொருளாக மாற்றிக்கொண்டு அரசியல் சந்தையில் ஏலத்திற்கு நிற்கும் இந்த தரங்கெட்ட அரசியல்வாதிகளின் கீழ்த்தரமான செயல்களினால் நாட்டு மக்கள் சற்று அதிகமாகவே சினமடைந்துள்ளனர்.

கட்சித் தாவும் நடவடிக்கைகள் அவ்வப்போது ஆங்காங்கே இருந்து வந்துள்ள போதிலும் நவீன மலேசியாவில் கடந்த 2009ஆம் ஆண்டில் பேராக் மாநிலத்தில் நடந்த அரசியல் அசிங்கத்தை நாம் இன்னும் மறந்திருக்க முடியாது.

அப்போதைய பக்காத்தான் ராக்யாட் கூட்டணியை சேர்ந்த 3 சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டணியை விட்டு வெளியேறியதால் பேராக் மாநில அரசு கவிழ்ந்தது நாம் அறிந்த ஒன்றே.

இதுபோல வேறு சில சமயங்களில் பல மாநில ஆட்சிகள் கவிழ்ந்துள்ள போதிலும், இவ்வாண்டு பிப்ரவரி மாதக் கடைசியில் மத்திய அரசாங்கம் கவிழ்ந்ததுதான் இம்மாதிரியான அக்கிரமங்களுக்கெல்லாம் உச்சமாக அமைந்தது.

ஜனநாயக நடைமுறைக்கு பெரும் களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் மலேசிய வரலாற்றில் முதல் முறையாக நடந்தேறிய இந்த ஆட்சிக் கவிழ்ப்பு, நாட்டு மக்களின் மனங்களை வெகுவாகப் பாதித்துவிட்டது.

62 ஆண்டுகால ஊழல் ஆட்சியை பெரும் போராட்டத்திற்கிடையே ஜனநாயக முறைப்படி கவிழ்த்த மக்களின் 22 மாதகால மகிழ்ச்சி சுக்குநூறாக சிதறியது என்றுதான் சொல்லவேண்டும்.

ஊழல் ஆட்சிக்கு ஒரு முடிவுகட்டி நல்லாட்சிக்கு வழிவகுக்க வேண்டும் என்ற மக்களின் அபிலாஷைகளுக்கு கிஞ்சிற்றும் மதிப்பளிக்காமல் அவர்களுடைய அயரா உழைப்பையே ஏணியாக பயன்படுத்தி நம்பிக்கை துரோகம் செய்து அரியணையில் அமர்ந்த சில சுயநல அரசியல்வாதிகளின் போக்கு நாட்டையே உலுக்கியது உண்மைதான்.

மேகா ஊழல் என்ற அடிப்படையில் 14ஆம் பொதுத் தேர்தலில் எந்த கட்சியை மக்கள் வேரறுத்தார்களோ அதே கட்சி இப்போது புறவழியாக நுழைந்து மீண்டும் ஆட்சியில் அமர்ந்து அதிகார சேட்டைகள் புரிவதுதான் மக்களுக்கு பெரும் வேதனை.

புத்ராஜெயாவில் அரங்கேறிய இந்த அரசியல் அசிங்கத்தை முன்மாதிரியாகக்கொண்டு  மாநில அரசாங்கங்களையும் தற்போது ஒன்றன்பின் ஒன்றாகக் கவிழ்த்து வரும் அரசியல் தவளைகளின் போக்கினால் பொதுமக்கள் மேலும் விரக்தியடைந்துள்ளதை நம்மால் உணரமுடிகிறது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் தொகுதி வாக்காளர்கள் தங்கள் மீது வைத்த நம்பிக்கையை சுயநலத்துக்காக இப்போது கூறு போட்டு விற்பனை சந்தைக்குக் கொண்டுவந்துள்ள இவர்களுடைய போக்கு வரலாறுகாணாத இழுக்கு என்றால் அது மிகையில்லை.

வாக்காளர்களின் எண்ணங்களை துச்சமென மதித்து அவற்றை புறந்தள்ளி, தங்களுடைய பேராசைகளை முன்நிறுத்தி ஜனநாயகத்தை இஷ்டம்போல பந்தாடும் இத்தகையோரின் போக்கின் வழி கெடா, பேராக், மலாக்கா மற்றும் ஜொகூர் ஆகிய மாநில அரசாங்கங்கள் கவிழ்க்கப்பட்டது நாம் அறிந்த ஒன்றே.

மேலும் சில மாநில ஆட்சிகளை கவிழ்ப்பதற்கு பல அரசியல் தவளைகள் தற்போது பேரம் பேசி வருவதாக கசிந்துள்ள தகவல் கேவலமான ஒன்றுதான்.

இவற்றையெல்லாம் அணுக்கமாக கண்காணித்து வரும் பல புதிய வாக்காளர்கள், குறிப்பாக இளையோர், ‘வாக்களிப்பதில் பயனே இல்லை, இனிமேல் தேர்தலில் வாக்களிக்கப் போதியலை’ என ஆதங்கப்படுவது, நலிவடைந்துள்ள நாட்டின் ஜனநாயகத்திற்கு மேலும் பின்னடைவுதான் என்பது மிகவும் வருத்தமான விசயம்.

ஆக கடந்த பொதுத் தேர்தலில் 82% ஆக இருந்த வாக்குப் பதிவு அடுத்த பொதுத் தேர்தலில் கணிசமான அளவுக்கு குறையவும் வாய்ப்புள்ளது என்பதையும் நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

கட்சித்தாவலுக்கு எதிராக இந்நாட்டில் இன்னும் சட்டம் இயற்றப்படாத நிலையில் ஜனநாயக படுகொலையினால் பாதிக்கப்படும் பொதுமக்கள் இளிச்சவாயர்கள்தான்.

எனவே ‘திருடனாய்ப்பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது’ என்பதற்கு ஏற்ப அழுக்கு அரசியல்வாதிகள் தங்களுடைய மனசாட்சிக்கு அஞ்சாவிட்டால் நம் நாட்டு ஜனநாயகம் திக்கற்றத் திசையில் தொடர்ந்து பயணித்துக்கொண்டுதான் இருக்கும் என்பதில் ஐயமில்லை.

ஆனால், மக்கள் தொடர்ந்து  இளிச்சவாயர்களாகவே இருப்பார்களா அல்லது வெகுசன மக்கள் விழிப்புணர்ச்சிக்கு உட்படுவார்களா என்பது பெரும்பான்மை இன மக்களின் கைகளில்தான் உள்ளது.