‘Perak Darul Kartun’ என அழைத்ததின் மூலம் பேராக் டிஏபி செயலாளர் இங்கா கோர் மிங், மாநிலத்தையும் அரச குடும்பத்தையும் அவமானப்படுத்தியுள்ளதாக பேராக் மந்திரி புசார் ஜாம்ரி அப்துல் காதிர் கூறுகிறார்.
தைப்பிங் தொகுதிக்கான நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் அத்தகைய சொற்களைப் பயன்படுத்தியிருக்கக் கூடாது. ஏனெனில் தலைவர் என்னும் முறையில் அவர் மக்களுக்கு நல்ல நடத்தையைக் காட்ட வேண்டும் என ஜாம்ரி சொன்னார்.
“இங்கா-வின் போக்கை மக்கள் இப்போது அறிந்துள்ளனர். தாங்கள் இது போன்ற தலைவரைப் பின்பற்ற வேண்டுமா என்பதை மக்களே இனிமேல் தீர்மானிக்க வேண்டும்.”
“மாநிலத்தை ‘Perak Darul Kartun’ என அழைத்ததின் மூலம் அவர் பேராக்கை அவமானப்படுத்தியுள்ளார்,” என ஈப்போவில் மாநிலச் செயலகத்தில் வாடிக்கையாளர்களைச் சந்திக்கும் நிகழ்வின் போது ஜாம்ரி நிருபர்களிடம் கூறினார்.
செப்டம்பர் 9ம் தேதி இங்கா அத்தகைய காயப்படுத்தும் சொற்களைக் கூறி மந்திரி புசாரை அவமானப்படுத்தியிருப்பது குறித்து வினவப்பட்ட போது ஜாம்ரி அவ்வாறு கூறினார்.
ஜாம்ரியை ‘மெட்டாலிக் கறுப்பு’ என்று வருணித்ததற்காக அண்மையில் இங்கா மந்திரி புசாரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். அத்தகைய வார்த்தைகளை பயன்படுத்தியதற்காக அரசியல் தலைவர்களும் அரசு சாரா அமைப்புக்களும் அவரைக் கடுமையாக சாடிய பின்னர் இங்கா மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.
பெர்னாமா