பாஸ் கட்சி தனது சமய உறுதி மொழியை ( bai’ah )விளக்குகிறது

பாஸ் கட்சியின் வேட்பாளர்கள் அனைவரும் பூர்த்தி செய்ய வேண்டிய  சமய உறுதி மொழியை ( bai’ah ) அந்தக் கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் துவான் இப்ராஹிம் துவான் மான் விளக்கியுள்ளார். அது மூன்று துறைகளை உள்ளடக்கியிருப்பதாக அவர் சொன்னார்.

வெற்றி பெற்ற வேட்பாளர்கள் வேறு கட்சிகளுக்குத் தாவுவதை தடுப்பதே சமய உறுதி மொழியின் முக்கிய நோக்கம் என அவர் குறிப்பிட்டார்.

“முதலாவதாக தாம் கட்சியை விட்டு விலகப் போவதில்லை என வேட்பாளர் வாக்குறுதி அளிக்க வேண்டும். இரண்டாவதாக அவர்கள் கட்சியிலிருந்து வெளியேறினால் அவர்கள் தங்கள் இடத்தைக் காலி செய்ய வேண்டும். ஏனெனில் அவர்கள் வாக்காளர்களுக்கும் மக்கள் வைத்த நம்பிக்கைக்கும் துரோகம் செய்துள்ளனர்.”

“இறுதியாக அவர்கள் வெளியேறி தங்கள் இடத்தை காலி செய்யாவிட்டால் அவர்களுடைய அலவன்ஸ்கள், ஒய்வூதியங்கள் உட்பட அவர்களுக்கு கிடைக்கும் எல்லா வருமானமும் ஹராமாக கருதப்படும்,” என துவான் இப்ராஹிம் கூறியதாக சினார் ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.

அம்னோவின் வாக்குறுதியை பாஸ் கட்சியின் சமய உறுதிமொழியுடன் ஒப்பீடு செய்த துவான் இப்ராஹிம், வேட்பாளர் தேர்வு, வேட்பாளருக்கான ஆதரவு ஆகியவற்றுடன் தேசியவாதக் கட்சியின் உறுதி மொழி தொடர்புடையது என்றும் நம்பிக்கை கோட்பாடுகளின் அடிப்படையில் அமையவில்லை என்றும் குறிப்பிட்டார்.

கடந்த சனிக்கிழமை நிறைவடைந்த அம்னோ ஆண்டுப் பொதுப் பேரவையில் அம்னோ bai’ah உறுதிமொழி எடுத்துக் கொள்ளும் சடங்கிற்கு துணைத் தலைவர் முஹைடின் யாசின் தலைமை தாங்கினார்.

இதனிடையே சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினர் குழுவைச் சேர்ந்த எம்பி-க்கள் தங்கள் இடத்தை தக்க வைத்துக் கொள்வதற்குப் போட்டியிடுவதில்லை என ஒப்புக் கொண்டுள்ளதாக நியூ ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

பாயான் பாரு எம்பி ஸாஹ்ரெய்ன் ஹசிமை மேற்கோள் காட்டி அந்தச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. பல சுயேச்சை எம்பி-க்களுடன் நடத்தப்பட்ட விவாதிக்கப்பட்டது போல சில சுயேச்சை எம்பி-க்கள் மீண்டும் போட்டியிட மாட்டார்கள் என அவர் சொன்னார்.

ஆனால் அவர் சம்பந்தப்பட்ட எம்பி-க்களின் பெயர்களையும் மீண்டும் போட்டியிட விரும்பும் எம்பி-க்களின் பெயர்களையும் வெளியிடவில்லை.

சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினர் குழுவில் ஸாஹ்ரெய்னுடன் மேலும் ஐந்து எம்பி-க்கள் இடம் பெற்றுள்ளனர். என் கோபால கிருஷ்ணன் (பாடாங் சிராய்), தான் தீ பெங் (நிபோங் திபால்), சுல்கிப்லி நோர்டின் (கூலிம் பண்டார் பாரு) மொஹ்சின் பாட்சுல் சம்சுரி (பாகான் செராய்), வீ சூ கியோங்( வாங்சா மாஜு) ஆகியோரே அவர்கள். அவர்கள் அனைவரும் ஏற்கனவே பிகேஆர் கட்சியில் இருந்தவர்கள்.

பாசிர் மாஸ் சுயேச்சை உறுப்பினரான இப்ராஹிம் அலி அந்தக் குழுவில் உறுப்பினராக இல்லை.