அன்வாரின் அரசியல் சாணக்கியம் அத்தியாவசியமாகிறது  

இராகவன் கருப்பையா – இனவாதமும் மதவதாமும் மலேசிய அரசியலில் புகுந்து அதையே இன்று நடைமுறை அரசியலாக மாற்றி விட்டது. இந்நிலை நாட்டின் பல்லின பண்பாட்டு வாழ்வியலை மாற்றி அமைக்கும். அதிலிருந்து விடுபட வேண்டுமானால் அது அன்வாரின் சாணக்கியத்தால்தான் முடியும்.

அரசியல் அரசியல் வரலாற்றில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்தார்போல் ஏமாற்றங்களை சந்தித்துவரும் ஒரு போராட்டவாதி என்றால் அது பி.கே.ஆர். கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிமாகத்தான் இருக்கும்.

தமது இளமை காலத்தில் மிகவும் தீவிரப் போக்குடைய அவர் ‘அபிம்’ எனும் இஸ்லாமிய இளைஞர் இயக்கத்திற்கு தலைமையேற்று மிகவும் துடிப்புமிக்க ஒரு வாலிபராக சமூக சேவைகளில் ஈடுபாடு காட்டி அனைவரது  கவனத்தையும் ஈர்த்தார். அந்த சமயத்தில்தான் அப்போதைய பிரதமர் மகாதீர் அரசியலுக்கு அவரை கொண்டு வந்தார்.

தனித்தன்மை வாய்ந்த அவருடைய பேச்சாற்றலினால் கவரப்பட்ட பாஸ் கட்சியினர் அவரை தங்கள் வசம் கவ்விச்செல்ல காத்திருந்த சமயத்தில்தான் மகாதீர் முந்திக்கொண்டார்.

ஆக கடந்த 1982ஆம் ஆண்டில் அம்னோவில் தமது அரசியல் பயணத்தைத் தொடக்கிய அன்வார் 11 ஆண்டுகளிலேயே துணைப் பிரதமர் பதவி வரையில் உயர்ந்து தமது அரசியல் ஆளுமையை மக்களுக்கு உணர்த்தினார்.

அதன் பிறகு 1998ஆம் ஆண்டிலும் 2015ஆம் ஆண்டிலும் இரு முறை அவர் சிறை சென்ற வரலாறு நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான்.

கடுமையான போராட்டங்களுக்கும் சவால்களுக்குமிடையே நாட்டிற்கு பிரதமராகும் தமது கனவுக்கு இன்னமும் உரமூட்டி வரும் 73 வயதுடைய அன்வாரின் மன வலிமையை நாம் பாராட்டாமல் இருக்க முடியாது.

கடந்த 1998ஆம் ஆண்டில் சிறை சென்றதாலும் இவ்வாண்டு தொடக்கத்தில் பக்காத்தான் ஆட்சி கவிழ்ந்ததாலும் இரு முறை பிரதமராகும் வாய்ப்பை நூலிழையில் இழந்த அவருடைய கனவுகளை கடைசி வரையிலும் சுக்கு நூறாக சிதைத்து வருவது மகாதீர்தான் என்பது மறுக்க முடியாத உண்மை.

கடந்த பொதுத் தேர்தலுக்கு முன் அன்வாரை நீதிமன்றத்திலும் மருத்துவமனையிலும் தனிப்பட்ட முறையில் சந்தித்து சமாதான கொடி காட்டிய மகாதீர், உள்ளூர மாற்றுக் கருத்தையே மனதில் வைத்துக் கொண்டு செயல்பட்டிருக்கிறார்  என பி.கே.ஆர். கட்சியினர் இப்போது சந்தேகிக்கின்றனர்.

ஆட்சியை கைப்பற்றி 2 ஆண்டுகளில் பிரதமர் பதவியை அன்வாரிடம் ஒப்படைக்க வேண்டும் என பங்காளிக் கட்சிகளிடையே ஒரு கூட்டு ஒப்பந்தம் இருந்த போதிலும் அந்த பதவி ஒப்படைப்பு தொடர்பாக முன்னுக்குப் பின் முரணாக அவர் வெளியிட்டு வந்த கருத்துகளில் பக்காத்தான் தலைவர்கள் மட்டுமின்றி நாட்டு மக்கள் அனைவருமே எரிச்சலடையத் தொடங்கிவிட்டனர்.

இருந்த போதிலும் அன்வார் பொறுமை காத்தார். ஊழலில் ஊறி பொருளாதாரம் சீரழிந்து கிடக்கும் நாட்டை செம்மைப் படுத்துவதற்கு மகாதீருக்கு போதிய அவகாசம் கொடுங்கள், அவருக்கு நெருக்குதல் கொடுக்க வேண்டாம் என தமது ஆதரவாளர்களை அமைதிப்படுத்திய அவர், ‘எனக்கு அவசரமில்லை, நான் காத்திருக்கிறேன்’ என்றுக் கூட குறிப்பிட்டார்.

இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதத்தில் சில சூழ்ச்சிதாரர்களின்  சதியால் அரசாங்கம் ஆட்டம் காணத் தொடங்கியபோது, யாரும் எதிர்பாராத வகையில், கூட்டணிக் கட்சிகளின் இதர தலைவர்களையும் கூட ஆலோசிக்காமல் திடீரென தமது பிரதமர் பதவியை மகாதீர் ராஜினாமா செய்ததால் அரசாங்கம் கவிழ்ந்தது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

ஆக, பிரதமர் பதவியை ராஜினாமா செய்து அரசாங்கம் கவிழ வகை  செய்ததை விடுத்து முறைப்படி அன்வாரிடம் அப்பதவியை அவர் ஒப்படைத்திருக்க வேண்டும் என அன்வாரின் ஆதரவாளர்கள் இப்போது ஆதங்கப்படுவதில் நியாயம் இருக்கத்தான் செய்கிறது.

அன்வாரை பிரதமராக்கும் எண்ணம் தொடக்கத்திலிருந்தே துளியளவும் மகாதீரிடம் இல்லையென அவர்கள் சினமடைந்துள்ளனர்.

நிலைமை இவ்வாறு இருக்க, ‘பிரதமர் பதவிக்கு அலைகிறார் அன்வார்’ என அவரை அவமானப்படுத்தும் வகையில் அவர் வெளியிட்ட ஒரு அறிக்கை, பி.கே.ஆர். கட்சியினருக்கு வெந்தப் புண்ணில் வேலைப் பாய்ச்சுவதைப் போலாகிவிட்டது.

இப்போதும் கூட கோபப்படாத அன்வார், ‘மகாதீர் அப்படி பேசுவது வழக்கம்தானே’ என சமாளித்துக் கொண்டது அவருடைய அரசியல் முதிர்ச்சியைத்தான் காட்டுகிறது.

நாட்டில் எந்நேரத்திலும் பொதுத் தேர்தல் அறிவிக்கப்படலாம் என்ற சூழல் நிலவும் இவ்வேளையில், எதிர் கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்த போது மகாதீரின் உள்நோக்கம் வெட்ட வெளிச்சமானது.

‘அன்வாருக்கு மக்களிடையே ஆதரவு இல்லை. எனக்குத்தான் மக்கள் ஆதரவு அதிகம். எனவே நான்தான் மீண்டும் பிரதமராவேன்’ என பிடிவாதமாக இருக்கும் மகாதீரின் போக்கினால் நாட்டு மக்கள் அனைவருமே அதிர்ச்சியடைந்துள்ளதை நாம் காணமுடிகிறது.

இதில் வியப்பு என்னவென்றால் 56 வயதிலும் 93 வயதிலும் இருமுறை பிரதமர் பதவியை வகித்தது போதவில்லை என்று 95ஆவது வயதில் மீண்டும் அப்பதவியை அலங்கரிக்கத் துடிக்கும் அவர் அன்வாரைப் பார்த்து ‘பிரதமர் பதவிக்கு அலைகிறார்’ என்று குறிப்பிட்டதுதான்.

பல்லின மக்களைக் கொண்ட ஒரு கட்சியின் தலைவரை மக்கள் பிரதமராக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்ற அவருடைய கூற்றில் இனவாத வாடை வீசியதையும் மக்கள் உணரத்தான் செய்தனர்.

மலாய்க்காரர்களின் கட்சித் தலைவர் ஒருவரைத்தான் மக்கள் பிரதமராக ஏற்றுக்கொள்வார்கள் என்று குறிப்பிட்ட மகாதீர் மீது ஒட்டு மொத்த மக்களும் இப்போது சினமடைந்துள்ளதாகத் தெரிகிறது.

இந்நிலையிலும் தொடர்ந்து அமைதி காக்கும் அன்வார், ‘எனக்கும் மகாதீருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் மட்டுமே தவிர தனிப்பட்ட முறையில் ஒன்றுமில்லை’ என்று குறிப்பிட்டு தம்மீதான மக்களின் மரியாதையை மேலும் வலுப்படுத்திக்கொண்டார்.

இதற்கிடையே பக்காத்தானில் உள்ள எல்லா பங்காளிக் கட்சிகளும் எதிர் கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக அன்வாரை ஒருமனதாக முன்மொழிந்ததைத் தொடர்ந்து மகாதீர் தனது அடுத்த வியூகத்திற்குத் தயாரானார்.

தமது 5 சகாக்களுடன் பக்காத்தானை விட்டு வெளியேறிய அவர் யாரும் எதிர்பாராத வகையில் தன்னிச்சையாகவே ஒரு முடிவெடுத்து சபா முதலமைச்சர் ஷாஃப்பி அப்டாலை பிரதமர் வேட்பாளராக அறிவித்து அவரையும் உசுப்பிவிட்டார்.

ஷாஃப்பியின் ‘வாரிசான் சபா’ கட்சியும் கூட கிழக்கு மலேசியாவைச் சேர்ந்த பல்லின மக்களை உறுப்பினர்களாகக் கொண்ட ஒரு கட்சி என்ற விசயம் மக்களுக்குத் தெரியாது என மகாதீர் நினைத்துவிட்டார் போலும்.

தமக்கு கிடைக்காத பதவி அன்வாருக்கும் கிடைக்கக் கூடாது என்ற எண்ணத்தில்தான் மகாதீரின் இந்த நகர்வு அமைந்துள்ளதாகத் தெரிகிறது.

இந்நிலையில் பிரதமர் முஹிடினுக்குக் கிட்டிய திடீர் அதிர்ஷ்டத்தைப் போல தமக்கும் கிடைக்கக் கூடிய வாய்ப்பு உள்ளதை உணர்ந்த ஷாஃப்பி அதற்கேற்றவர் போலவே தமது நடவடிக்கைகளையும் பேச்சுத் தோரணையையும் தற்போது மாற்றிக்கொண்டுள்ளதை நம்மால் உணரமுடிகிறது.

எது எப்படியாயினும் பலதரப்பட்ட தடங்கல்களையும் சிக்கல்களையும் சவால்களையும் அவமானங்களையும் சந்தித்தும் கூட சற்றும் தளராமல் தமது இலக்கை நோக்கி தொடர்ந்து பயணித்துக்கொண்டிருக்கும் அன்வார் வெளிக் கொணரும் அரசியல் முதிர்ச்சியை வைத்துப் பார்த்தால் இந்நாட்டின் பல்லின மக்களுக்கும் சிறந்ததொரு தலைமைத்துவத்தை அவரால் வழங்க முடியும் என்ற நம்பிக்கை மக்களுக்கு இன்னமும் உண்டு.