கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரத்தை மீட்க ரூ.64 லட்சம் கோடி ஒதுக்கீடுஐரோப்பிய கூட்டமைப்பு ஒப்புதல்

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க ரூ.64 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்ய ஐரோப்பிய கூட்டமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது.

பிரஸ்சல்ஸ், ஐரோப்பிய கூட்டமைப்பைச் சேர்ந்த நாடுகள் மேலாண்மை மண்டல மேம்பாடு, விண்வெளி ஆய்வு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி, சுகாதாரம், கல்வி கலாசாரம் குடியேற்றம் எல்லை பாதுகாப்பு ஆகிய துறைகளுக்கான பட்ஜெட்டை பொதுவாக நிறைவேற்றி செயல்படுத்தி வருகின்றன.

உறுப்பு நாடுகள் தங்களின் தேசிய பட்ஜெட்டோடு கூடுதலாக இந்த பட்ஜெட்டை இணைத்து வரவு செலவில் ஈடுபட்டு வருகின்றன.

இதனிடையே சீனாவிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் ஐரோப்பிய நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. கொரோனாவால் பல ஐரோப்பிய நாடுகள் பெரும் பொருளாதார இழப்பை சந்தித்துள்ளன.

இந்த நிலையில் ஐரோப்பிய கூட்டமைப்பின் பட்ஜெட் மற்றும் கொரோனா தடுப்பு நிவாரணநிதி ஒதுக்கீட்டை நிறைவு செய்வதற்கான கூட்டம் பெல்ஜியம் தலைநகர் பிரஸ்சல்சில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது.

எனினும் கொரோனா தொற்று நெருக்கடி காரணமாக பட்ஜெட் தொடர்பாக ஒருமித்த கருத்தை எட்டுவதில் 27 உறுப்பு நாடுகளின் தலைவர்களிடையே இழுபறி நீடித்தது.

கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள உறுப்பு நாடுகளுக்கு ஊக்க கடனாக 750 பில்லியன் யூரோக்களை ( இந்திய மதிப்பில் சுமார் ரூ.64 லட்சம் கோடி) ஒதுக்கீடு செய்ய ஐரோப்பிய கூட்டமைப்பு பரிந்துரைத்தது.

நெதர்லாந்து உள்ளிட்ட 5 நாடுகள் செலவினங்களுக்கான வரம்புகளை பாதுகாத்தல் மற்றும் நிதியுதவி தேவைப்படும் நாடுகளுக்கான எந்தவொரு மீட்பு திட்டத்திற்கும் கடுமையான சீர்திருத்த உத்தரவாதங்களை விதித்தல் ஆகியவற்றை வலியுறுத்தின.

இதுவே தலைவர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தையின் மையப் புள்ளியாக அமைந்தது. இது தொடர்பாக தலைவர்களுக்கு இடையில் ஒருமித்த கருத்து ஏற்படுவதற்கு பதிலாக கருத்து வேறுபாடு தொடர்ந்து அதிகரித்து வந்தது.

இதன் காரணமாக 2 நாட்களில் முடிவடைய திட்டமிடப்பட்டிருந்த ஐரோப்பிய கூட்டமைப்பின் கூட்டத்தை மேலும் 2 நாட்களுக்கு நீட்டிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

அதன்படி ஐரோப்பிய கூட்டமைப்பின் பட்ஜெட் மற்றும் கொரோனா நிவாரண நிதி ஒதுக்கீட்டை நிறைவேற்றுவது தொடர்பாக 27 நாடுகளின் தலைவர்கள் இடையே கடந்த 4 நாட்களாக இரவும் பகலுமாக பேச்சுவார்த்தை நீடித்தது.

இறுதியாக நேற்று அதிகாலை ஐரோப்பிய கூட்டமைப்பின் தலைவர்கள் இடையே ஒருமித்த கருத்து ஏற்பட்டது. இது குறித்து ஐரோப்பிய கூட்டமைப்பின் தலைவர் சார்லஸ் மைக்கல் ஒற்றை வரியில் ‘டீல்‘ என டுவிட்டரில் பதிவு வெளியிட்டார்.

அதன்படி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க, 750 பில்லியன் யூரோ மதிப்பிலான நிதி தொகுப்பிற்கு ஐரோப்பிய கூட்டமைப்பின் தலைவர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்.

அத்துடன் சேர்த்து முன்னெப்போதும் இல்லாத வகையில் அடுத்த 7 ஆண்டுகளுக்கு ஐரோப்பிய கூட்டமைப்பின் ஒட்டு மொத்த பட்ஜெட் தொகையாக 1.82 டிரில்லியன் யூரோக்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.154 லட்சம் கோடி) ஒதுக்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஐரோப்பிய கூட்டமைப்பின் ஒப்புதல் குறித்து ‘ஐரோப்பாவுக்கு வரலாற்று சிறப்பு மிக்க தினம்‘ என பிரான்ஸ் அதிபர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

அதேபோல் பெல்ஜியம் பிரதமர் சோபி வில்ம்ஸ், “எதிர்காலத்திற்காக ஐரோப்பிய கூட்டமைப்பு முன்னெப்போதும் இவ்வளவு முதலீடு செய்ய முடிவு செய்ததில்லை“ என டுவிட்டரில் பதிவிட்டு பாராட்டி பதிவிட்டுள்ளார்.

dailythanthi