துருக்கியின் கட்டுப்பாட்டில் உள்ள சிரிய நகரத்தில் குண்டுவெடிப்பு – 8 பேர் பலி

தாக்குதல் நடந்த பகுதி

துருக்கியின் கட்டுப்பாட்டில் உள்ள சிரியாவின் நகரத்தில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு தாக்குதலில் 8 பேர் உயிரிழந்தனர்.

டமாஸ்கஸ்: சிரியாவில் 2011-ம் ஆண்டு தொடங்கிய உள்நாட்டுப்போரின் போது குர்திஷ் போராளிகள் அந்நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள பல்வேறு மாகாணங்களை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து தன்னிச்சையாக ஆட்சி நடத்தி வந்தனர்.

இந்த போராளிகள் குழுவை ஒழிக்க ரஷியா உதவியுடன் சிரியா பல ஆண்டுகளாக சண்டையிட்டது.

இதற்கிடையில், சிரியாவில் செயல்பட்டு வந்த குர்திஷ் போராளிகளை பயங்கரவாதிகள் என கூறிவந்த துருக்கி அவர்கள் மீது தரைவழி மற்றும் வான்வெளி தாக்குதல்களை நடத்தி வருகிறது.

அதேபோல், போராளிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சிரியாவின் அலெப்போ மாகாணத்தையும் துருக்கி கடந்த 2018-ம் ஆண்டு தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தது.

மேலும், அலெப்போவில் உள்ள குர்திஷ் போராளிகளை அழிக்கும் நடவடிக்கையில் துருக்கி படையினரும், அதன் ஆதரவு கிளர்ச்சியாளர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் குர்திஷ் போராளிகளுக்கும், துருக்கி ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.

இந்நிலையில், துருக்கியின் கட்டுப்பாட்டில் உள்ள சிரியாவின் அல்-ஹசஹா மாகாணம் ரஸ் அல்-அன் நகரில் உள்ள காய்கறி சந்தை பகுதியில் இன்று குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது.

சந்தைப்பகுதியில் வெடிகுண்டுகளுடன் நிறுத்தப்பட்டிருந்த மோட்டர் சைக்கிள் திடீரெனெ வெடித்து சிதறியது. இந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் பொதுமக்கள் உள்பட 8 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும், 19 பேர் படுகாயமடைந்தனர்.

சந்தைப்பகுதியில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு குர்திஷ் போராளிகளே காரணம் என துருக்கி குற்றஞ்சாட்டியுள்ளது.

malaimalar