கோல் பீல்டு விடுதி நிலம் தனக்கு தெரிந்தவரையில் அது சிலாங்கூர் மாநில அரசிடம்தான் உள்ளது என்றார் சேவியர் ஜெயகுமார். இன்று நாடாளுமன்றத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் விளக்கம் அளித்த முன்னாள் அமைச்சருமான சேவியர் நிருபர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
“நான் சிலாங்கூர் ஆட்சி குழு உறுப்பினராக இருந்த காலகட்டம் 2008 முதல் மார்ச் 2013 வரையில். அதன்பிறகு நான் சட்டமன்ற உறுப்பினராகவும் 2018 முதல் நாடாளுமன்ற உறுப்பினராகவும் முன்னாள் அமைச்சராகவும் இருந்துள்ளேன். எனவே, என்னுடைய காலகட்டத்தில் சிலாங்கூர் நடந்ததை விளக்குகிறேன்” என்றார்.
இந்த செய்தியாளர் சந்திப்பு நேர்காணலை மக்கள் ஓசையின் நிருபர் இராஜன் அவர்கள் முகநூலில் பதிவேற்றம் செய்துள்ளார்.(காண இங்கே சொடுக்கவும்).
கோல் பீல்டு விடுதிக்காக 2012-இல் கே.எல்.கெப்போங் நிறுவனம் 7.6 ஏக்கர் நிலத்தை வழங்க முன்வந்தது. இந்த நிலத்தை ஆவணப்படுத்தும் வகையில் முறையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. நான் எடுத்த நடவடிக்கையின் படி அந்த நிலம் தனியார் உரிமத்திலிருந்து மாநில அரசின் பெயருக்கு மாற்றப்பட்டது. அது இடைநிலைப்பள்ளிகளில் பயிலும் தோட்டப்புற மாணவர்களின் தங்கும் விடுதிக்காக ஒதுக்கப்பட்டதாக கூறினார் சேவியர்.
இன்னமும் அந்த நிலம் இருக்கா இல்லையா என்ற கேள்விகளுக்கு மாநில அரசின் பிரதிநிதிகள் பதில் தருவதுதான் தகுந்த வழிமுறை என்றவர், அந்த நிலம் எங்குள்ளது என்பதையும் கோடி காட்டினார்.
அவதூறான பத்திரிக்கை செய்திகள் பற்றி கருத்துரைத்த அவர், உண்மையை அறிய வேண்டும் என்றால் என்னிடம் தொடர்பு கொண்டு கேட்க வேண்டும். அதை விடுத்து தான் நிலத்தை அபகரித்து விட்டதாக ஒரு வதந்தியை உருவாக்கி செய்தியாக போடுவது குற்றமாகும். எனவே சம்பந்தப்பட்ட தரப்பினர் மீது போலிஸ் புகாரும் வழக்கும் தொடுக்க இருப்பதாக சேவியர் அறிவித்தார்.