ரூ.100 கோடி மதிப்பிலான கடத்தல் தந்தம்: சிங்கப்பூரில் அழிப்பு

சிங்கப்பூர்: உலக யானைகள் தினம் இன்று (ஆக., 12ம் தேதி) கொண்டாப்படும் வேளையில், சிங்கப்பூரில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.100 கோடி மதிப்பிலான யானை தந்தங்களை அழிக்கும் பணிகள் துவங்கியுள்ளன.

தந்தங்களுக்காக யானைகள் கொல்லப்படுவது தொடர்ந்து நடந்து வருகிறது. குறிப்பாக ஆப்பிரிக்க யானைகள் தந்த வேட்டையால் அதிகப்படியாக கொல்லப்படுகின்றன. யானைகளை கொன்று எடுக்கப்படும் தந்தங்கள், சீனா மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளுக்கு அதிகளவில் கடத்தப்படுகின்றன. யானை தந்த வர்ததகத்திற்கு, சிங்கப்பூர் அரசு தடை விதித்துள்ளது. இருந்தும் அந்நாட்டு துறைமுகம் வழியாகவே இச்சட்டவிரோத வர்த்தகம் அதிகளவில் நடக்கிறது.

இந்நிலையில் கடத்தல்காரர்களுக்கு வலுவான பதிலடி கொடுக்கும் வகையில், கடந்த 2014 முதல் 2019ம் ஆண்டு வரை பறிமுதல் செய்யப்பட்ட, 8.8 டன் யானை தந்தங்களை, சாலையில் கொட்டி நொறுக்கி அழிக்கும் பணியை அந்நாட்டு தேசிய பூங்காக்கள் வாரியம் துவங்கியுள்ளது. 300 யானைகளிலிருந்து இந்த தந்தங்கள் எடுக்கப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

தந்தங்களை அழிக்கும் நடவடிக்கை அவர்களின் யுடியூப் சேனலில் நேரலை செய்யப்படுகிறது. ‘இதன் மூலம் தந்தங்கள் சந்தைக்கு மீண்டும் வருவது தடுக்கப்படும். உலக விநியோக சங்கிலி ஆட்டம் காணும்’ என, தேசிய பூங்காக்கள் வாரியம் தெரிவித்துள்ளது.

தினமும் நூறு ஆப்பிரிக்க யானைகள் தந்தங்கள், இறைச்சி மற்றும் உடல் பாகங்களுக்காக கொல்லப்படுகின்றன. இதனால் தற்போது ஆப்பிரிக்க யானைகள் எண்ணிக்கை 4 லட்சமாக குறைந்துள்ளது. சீனா மற்றும் வியட்நாமில் யானை தந்தங்கள் மூலம் நகைகள் செய்யப்படுவதால் இருநாடுகளும் சட்டவிரோதமாக வரும் தந்தங்களை வாங்கி குவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

dinamalar