நதிகளைப் பாதுகாப்பது அவசியம்! – சார்ல்ஸ் சந்தியாகோ

நதி மாசுபாட்டால் ஏற்படும் நீர் விநியோகத் தடங்கல்கள் மீண்டும் மீண்டும் ஏற்படுவதைத் தொடர்ந்து, நதி பாதுகாப்பு அமைப்பை நிறுவுமாறு வலியுறுத்தியுள்ளார் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகோ.

தேசிய நீர் சேவை ஆணையத்தின் (SPAN) முன்னாள் தலைவரான அவர், ஆற்றைச் சுற்றி 300 முதல் 400 மீட்டர் பரப்பளவில் ஒரு இடையகப் பகுதியை உருவாக்க வேண்டும் என்றும், அப்பகுதியில் எந்த வணிக நடவடிக்கைகளும் செய்ய அனுமதிக்கக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

“சுங்கை நெகாரா பாதுகாப்பு வாரியத்தை அரசாங்கம் உடனடியாக அமைக்க வேண்டும். பின்னர் 300 முதல் 400 மீட்டர் வரையான இடையகப் பகுதியை உருவாக்க வேண்டும்.”

“சி.சி.டி.வி மற்றும் பிற தொழில்நுட்பங்களின் உதவியுடன் இப்பகுதியை கண்காணிக்க காவல் மற்றும் பிற அமலாக்க அமைப்புகளை நியமிக்கலாம்” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூரில் சமீபத்திய நீர் விநியோக இடையூறு செப்டம்பர் 3 முதல் ஏற்பட்டுள்ளது. இது, சுங்கை சிலாங்கூர் நீர் சுத்திகரிப்பு நிலையம் 1, 2, 3 (Rawatan Air (LRA) Sungai Selangor) மற்றும் ரந்தாவ் பஞ்சாங் நீர் சுத்திகரிப்பு மையங்களில் ஏற்பட்டது. பின், ரவாங்கின் சுங்கை கோங் ஆற்றில் ஏற்பட்ட தூய்மைக் கேடு கண்டறியப்பட்டது.

தொழிற்சாலை ஒன்றில் இருந்து வெளியேறிய அசுத்தமான எண்ணெய்க் கழிவுகளால் அந்த நான்கு சுங்கை சிலாங்கூர் நீர் சுத்திகரிப்பு மையங்கள் தங்களின் நீர் சுத்திகரிப்பு மற்றும் விநியோக சேவைகளை செப்டம்பர் 3, வியாழக்கிழமை முதல் தற்காலிகமாக நிறுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

ரவாங் சுங்கை கோங் ஆற்றில் தூய்மைக் கேடு ஏற்படுவதற்குக் காரணமாக அமைந்த தொழிற்சாலைக்கு சொந்தமான நான்கு மேலாளர்களும் பின்னர் கைது செய்யப்பட்டனர். மேலதிக விசாரணைக்காக அவர்களை நேற்று தொடங்கி ஆறு நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த தொழிற்சாலை ஒரு தொடர் குற்றவாளி என்று கண்டறியப்பட்டுள்ளதாக நேற்று சிலாங்கூர் சுற்றுச்சூழல் எக்ஸோ ஹீ லோய் சியான் கூறினார். சில மாதங்களுக்கு முன்பு இதே குற்றத்திற்காக ஏற்கனவே இந்த தொழிற்சாலைக்கு RM60,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இடையக பகுதியை ஆக்கிரமிக்கும் நிறுவனங்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கும் ஒரு சட்டத்தை இயற்றுவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்றும் சார்லஸ் அரசாங்கத்தை வலியுறுத்தினார்.

“அரசாங்கம் இதன் மூலம் நிறுவனங்களிலிருந்து நச்சு, ரசாயனம், நெகிழி மற்றும் கழிவுகள் உள்ளிட்ட பல்வேறு மாசுபடுத்தும் நடவடிக்கைகளில் இருந்து நதியைப் பாதுகாக்க முடியும்” என்று அவர் கூறினார். அபராதத்தை அதிகரிக்கும் நடவடிக்கை ஊழல் காரணமாக தோல்வியுற்றது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

இன்று, செப்டம்பர் 9 ஆம் தேதி நீர் விநியோகத் தடை முழுமையாக தீரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2019 ஆண்டு முதல், சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூர் குறைந்தது ஐந்து நீர் விநியோகத் தடைகளை எதிர்நோக்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.