பாகிஸ்தானில் பருவ மழையால் 300 பேர் பலி

பருவ மழை

பாகிஸ்தானில் பருவமழையால் ஏற்பட்ட வெள்ளம் உள்ளிட்ட பேரிடரில் சிக்கி இதுவரை 135 ஆண்கள், 107 குழந்தைகள், 70 பெண்கள் உள்பட 310 பேர் உயிரிழந்தனர்.

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை பருவமழை காலமாக உள்ளது. இந்தப் பருவமழை காலத்தில் வெள்ளம் நிலச்சரிவு போன்ற இயற்கை பேரிடர்களால் நூற்றுக்கணக்கான உயிரிழப்பும், பல கோடி ரூபாய் மதிப்புக்கு பொருட்சேதமும் ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது. இவற்றை சமாளிக்க பாகிஸ்தான் அரசு ஒவ்வொரு ஆண்டும் போராடி வருகிறது.

இந்த நிலையில் தற்போது பாகிஸ்தான் அரசு கொரோனா வைரசுக்கு எதிராக போராடி வரும் நிலையில் பருவமழையும் அங்கு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வகையில் கடந்த ஜூன் மாத இறுதியிலிருந்து பெய்து வரும் பருவ மழையால் ஏற்பட்ட இயற்கை பேரிடர்களில் சிக்கி 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பாகிஸ்தான் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

பருவமழையால் ஏற்பட்ட வெள்ளம் உள்ளிட்ட பேரிடரில் சிக்கி இதுவரை 135 ஆண்கள், 107 குழந்தைகள், 70 பெண்கள் உள்பட 310 பேர் உயிரிழந்தனர்.

இதில் அதிகபட்சமாக சிந்து மாகாணத்தில் 136 பேரும், கைபர் பக்துங்வாவில் 116 பேரும், பஞ்சாப்பில் 16 பேரும், பலூசிஸ்தானில் 21 பேரும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 12 பேரும், கில்கிட்பால்டிஸ்தான் பகுதியில் 11 பேரும் உயிரிழந்தனர். பருவமழை பாதிப்பில் சிக்கி 142 பெண்கள், 41 குழந்தைகள், 6 ஆண்கள் உள்பட 239 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

வெள்ளத்தில் சிக்கி 78 ஆயிரத்து 521 வீடுகள் முற்றிலுமாக இடிந்து தரைமட்டமாகின. மேலும் 1 லட்சத்து 39 ஆயிரத்து 102 வீடுகள் சேதமடைந்தன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

malaimalar