இம்ரான் கானுக்கு நெருக்கடி; கைகோர்த்த எதிர்க்கட்சிகள்

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரண்டு, பிரதமர் பதவிலிருந்து இம்ரான் கான் ராஜினாமா செய்ய வலியுறுத்தி, தொடர் போராட்டங்களை நடத்த முடிவு செய்துள்ளன.

நம் அண்டை நாடான பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது தலைமையிலான அரசின் நடவடிக்கைகளில் முறைகேடு அதிகரித்து விட்டதாகவும், பார்லிமென்ட், ‘ரப்பர் ஸ்டாம்ப்’ போல் செயல்படுவதாகவும், எதிர்க்கட்சிகள் புகார் கூறி வருகின்றன.

இந்நிலையில், பாக்., மக்கள் கட்சி, பாகிஸ்தான் முஸ்லிம் லீக் – நவாஸ் கட்சி, ஜமாத் உலமா இஸ்லாம் பசில் உள்ளிட்ட பெரும்பாலான எதிர்க்கட்சிகள் ஒரே அணியில் திரண்டு உள்ளன. இந்த கட்சிகள் சார்பில், சமீபத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் நடந்தது.

இதில் ‘இம்ரான் கான், பிரதமர் பதவியிலிருந்து விலக வேண்டும். ராணுவத்தின் தலையீடு, அரசின் நடவடிக்கைகளில் அதிகரித்துள்ளது, நாட்டின் வளர்ச்சிக்கு ஆபத்தை ஏற்படுத்தும்’ என்பது உள்ளிட்ட, 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இது குறித்து, அனைத்துக் கட்சி கூட்டணி ஒருங்கிணைப்பாளர் மவுலானா பசில் உர் ரகுமான் கூறியதாவது: இம்ரான் கான் பதவி விலகக்கோரி, அனைத்து மாகாணங்களிலும், அக்டோபரில் பேரணி நடத்தப்படும். இதன் தொடர்ச்சியாக, டிசம்பரில் நாடு முழுதும் எதிர்க்கட்சிகள் சார்பில் பேரணிகளும், கண்டன பொதுக் கூட்டங்களும் நடத்தப்படும்.

இறுதியாக, ஜனவரியில், நாடு முழுதும் உள்ள தொண்டர்களை திரட்டி, இஸ்லாமாபாதில் பிரமாண்ட பேரணி நடத்தப்படும். இம்ரான் கான் உடனடியாக பதவி விலகி, பார்லிமென்ட்டை கலைக்க வேண்டும். அதற்கு பின் நடக்கும் தேர்தல், நேர்மையாகவும், நியாயமாகவும் நடப்பதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்

dinamalar