அமெரிக்காவுடன் கைதிகள் பரிமாற்றத்துக்கு தயார்- ஈரான் அறிவிப்பு

ஈரான் கொடி

அமெரிக்காவுடன் கைதிகள் பரிமாற்றத்துக்கு தயார் என்று ஈரான் அறிவித்துள்ளது.

நியூயார்க்: அமெரிக்கா-ஈரான் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. ஈரான் மீது பொருளாதார தடையை அமெரிக்க விதித்து இருக்கிறது.

2015-ம் ஆண்டு ஈரான் உடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறிய பிறகு இரு நாடுகளுக்கும் இடையேயான விரிசல் அதிகரித்தது.

இந்த நிலையில் ஈரான் மீதான பொருளாதார தடையை நீக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் இருந்தன. ஆனால் அதை நிராகரித்த அமெரிக்கா ஈரான் மீது பொருளாதார தடைகளை மீண்டும் அமல் படுத்துவதாக அறிவித்தது.

இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மைக்பாம்பியோ கூறும் போது, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் 2231-ன் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தடைகளை அமல்படுத்த தவறும் ஐ.நா. உறுப்பு நாடுகள் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று தெரிவித்தார்.

இதற்கிடையே ஈரான் மீதான பொருளாதார தடையை மீண்டும் அமெரிக்கா அமல்படுத்தியதை ஐ.நா. ஆதரிக்காது என்று அந்த அமைப்பின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் அமெரிக்காவுடன் கைதிகள் பரிமாற்றத்துக்கு தயார் என்று ஈரான் அறிவித்துள்ளது.

இதுகுறித்து நியூயார்க்கில் நடந்த வெளியுறவுத்துறை கவுன்சில் கூட்டத்தில் ஈரான் நாட்டு வெளியுறவுத்துறை மந்திரி முகமது ஜாவித் கூறியதாவது:-

அமெரிக்காவுடன் அனைத்து கைதிகள் பரிமாற்றத்துக்கு ஈரான் தயாராக இருக்கிறது. அமெரிக்க சிறைகளில் ஈரானியர்கள் தொடர்ந்து இருக்கிறார்கள். ஏனென்றால் அவர்கள் தங்கள் நாட்டை காட்டி கொடுக்க மறுக்கிறார்கள். சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர்களை கைதிகள் பரிமாற்ற முறையில் பரிமாறிக் கொள்ள நாம் தயாராக உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஈரானிய-அமெரிக்க தந்தை மற்றும் மகனான பாகர், சியாம் நமாஸி உள்ளிட்ட பலர் ஈரானில் அமெரிக்க கைதிகளாக உள்ளனர். அவர்களை விடுவிக்க வேண்டும் என்று அமெரிக்கா நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

malaimalar