நியூயார்க்: கொரோனாவை எதிர்கொண்டது போன்று உலக நாடுகள் ஒற்றுமையில்லாமல் பருவநிலை மாற்றத்தையும் எதிர்கொண்டால் விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கும் என ஐ.நா., பொதுச்செயலர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில், ஐ.நா., சபையின், 75வது ஆண்டு பொதுக்கூட்டம் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்று வருகிறது. கொரோனா பரவல் காரணமாக, உறுப்பு நாடுகளின் தலைவர்கள் ஐ.நா., பொதுக்கூட்டத்தில் நேரடியாக பங்கேற்று உரையாற்ற முடியாததால் அவர்களின் பதிவு செய்யப்பட்ட உரை ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இதில் உரையாடிய டிரம்ப், கொரோனா வைரஸ் பரவலுக்கு சீனா தான் காரணம் என்றும், இந்த பேரழிவுக்கு சீனா பொறுப்பேற்க வேண்டும் எனவும் கூறினார்.
டிரம்பின் இந்த உரைக்கு கண்டனம் தெரிவித்த சீனா, டிரம்ப் அரசியல் வைரஸ் பரப்புவதாக விமர்சனம் செய்தது. ரஷ்யாவும் அமெரிக்காவுக்கு எதிராக கருத்து தெரிவித்தது. இவ்வாறாக உலக நாடுகள் ஒற்றுமை இல்லாமல் மாறி மாறி குற்றம்சாட்டியதற்கு ஐ.நா., பொதுச்செயலர் ஆன்டனியோ கட்டெரஸ் கண்டனம் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 கோடியை கடந்து விட்டது. வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 லட்சத்தை நெருங்கியுள்ளது. இந்த கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவல் சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பிற்கு வைக்கப்பட்ட பரீட்சையாகும்.
இந்த பரீட்சையில் நாம் அடிப்படையிலேயே தோல்வியடைந்து விட்டோம். உலக நாடுகளில் இந்த தொற்று பாதிப்பை எதிர்க்கொள்ள தயாராக இல்லாததும், நாடுகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு, ஒற்றுமை இல்லாததுமே இதற்கு காரணம். இதேபோன்று ஒற்றுமையில்லாமலும், சீர்குலைந்து ஒழுங்கற்ற நிலையில் கொரோனாவை எதிர்கொண்டது போன்று உலக நாடுகள் பருவநிலை மாற்றத்தையும் எதிர்கொண்டால் விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கும் என நான் அஞ்சுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்
dinamalar