ஆசியா கண்டத்தின் வரலாற்றில் மிக நீண்ட கால அரசியல் சிறைவாசம் அனுபவித்த சியா தை போ (Chia Thye Poh), வயது 70, லிம் லியான் கியோக் ஆன்மா விருத்துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவ்விருது டிசம்பர் 18, 2011 இல் அவருக்கு வழங்கப்படும்.
சிங்கப்பூர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான சியா 32 ஆண்டுகளுக்கு விசாரணையின்றி சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். எந்த ஒரு சூழ்நிலையிலும் ஜனநாயக கோட்பாட்டின் மீது அவர் கொண்டிருந்த அசைக்க முடியாத நம்பிக்கை அவரது நன்யாங் பல்கலைக்கழக உணர்வை வெளிப்படுத்தியது. அதற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
1963 ஆம் ஆண்டில், சிங்கப்பூரில் பல அரசியல் ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டனர். அப்போது கைது செய்யப்பட்ட பொதுத்தேர்தல் வேட்பாளர் ஒருவரின் இடத்தை தன்னலம் கருதாமல் நிரப்பிய சியா, பின்னர் சோசலிச முன்னணியின் வேட்பாளராக சிங்கப்பூர் நாடாளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டார். சிங்கப்பூர் மலேசியாவின் ஓர் அங்கமாக இருந்தபோது 1963-1965 ஆம் ஆண்டுகளில் சியா மலேசிய நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தார்.
பேச்சு உரிமை, நீதி நிலைநிறுத்தல் ஆகியவற்றில் மிகுந்த ஈடுபாடு கொண்ட சியா, மலேசிய தொழிற்கட்சியின் பேராக் மாநில கிளையின் கூட்டத்தில் ஏப்ரல் 24, 1966 இல் ஆற்றிய உரைக்காக மலேசியாவிற்குள் நுழைவதிலிருந்து நிரந்தரமாக தடைசெய்யப்பட்டார்.
32 ஆண்டுகால தடுப்புக்காவல்
கொடூரச் சட்டமான இசாவின் கீழ் சியா சிங்கப்பூர் அரசாங்கத்தால் அக்டோபர் 29, 1966 இல் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டார். மே 1989 ஆம் ஆண்டில், செந்தோசா தீவில் வீட்டுக்காவல் சூழலில் தடுத்து வைக்கப்பட்டார். அங்கு அவர் 9 ஆண்டுகளைக் கழித்தார்.
32 ஆண்டுகளுக்கு பல்வேறு வகையான கட்டுப்பாடுகளின் கீழ் வைக்கப்பட்டிருந்த சியா நவம்பர் 27, 1998 இல் இறுதியாக நிபந்தனை ஏதுமின்றி விடுவிக்கப்பட்டார்.
கொள்கைவாதியான சியா, தாம் விடுவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டவுடன் இசா சட்டத்தை வன்மையாகக் கண்டித்து ஓர் அறிக்கையை வெளியிட்டார். அதன் பின்னர், நெதர்லாந்து, த ஹேக்கில் சமுதாய ஆய்வுக் கழகத்தில் படித்து முதுகலை மற்றும் முனைவர் பட்டங்களைப் பெற்றார்.
எல்எல்ஜி விருது
லிம் லியான் கியோக் ஆன்மா விருது 1988 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இவ்விருது சீனமொழி கல்விக்கு பங்களிப்பு செய்தவர்களுக்கும் லிம் லியான் கியோக்கின் மனத்துணிவுப் பாங்கை வெளிப்படுத்துபவர்களுக்கும் வழங்கப்படும் மிக உன்னதமான கௌரவமாக மலேசிய சீன சமூகத்தால் கருதப்படுகிறது.
லிம் லியான் கியோக் சமத்துவத்திற்காகவும் நீதிக்காகவும் துணிச்சலுடன் போராடியவர். 1950-60 ஆம் ஆண்டுகளில், அவர் டோங் ஜியாவ் ஸோங் அமைப்பின் தலைவராக இருந்தார்.
1960 ஆம் ஆண்டில், சீனமொழி இடைநிலைப்பள்ளிகளைத் தேசியப்பள்ளிகளாக மாற்றுவதற்கு வழிவகுக்கும் ரஹ்மான் தாலிப் அறிக்கைக்கு எதிராக லிம் லியன் கியோக் நடத்திய போராட்டத்தின் விளைவாக 1961 ஆண்டில் அவரது குடியுரிமையை அரசாங்கம் பறித்தது. ஆசிரியர் தொழில் புரிவதற்கான அவரது உரிமத்தையும் அரசாங்கம் ரத்து செய்தது.
பிழைப்புக்கு வழியற்றவராக, நாடற்றவராக லிம் லியன் கியோக் 1985 ஆம் ஆண்டு காலமானார்.
அவ்வாண்டிலிருந்து லிம் லியன் கியோக் மலேசிய சீன சமூகத்தின் ஆன்மாவாக கருதப்படுகிறார்.
அதே ஆண்டில், அவரது நினைவகமாக எல்எல்ஜி கலாச்சார மேம்பாட்டு மையம் (LLG Cultural Development Centre) தோற்றுவிக்கப்பட்டது.
அனைவரும் வருக!
டிசம்பர் 18, 2011 இல், காலை மணி 10.00 க்கு கோலாலம்பூர் கன்பூசியன் சுயேட்சை இடைநிலைப்பள்ளி பல்நோக்கு மண்டபத்தில் (Confucian Independent Secondary School’s Multi-Purpose Hall) சியா தை போவுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும்.
அனைவரும் கலந்துகொள்ளுமாறு அழைக்கப்படுகின்றனர்.