அமெரிக்க நாட்டில் தேர்தலுக்கு முன் கொரோனா தடுப்பூசி தயாராக வாய்ப்பு இல்லை – முன்னணி மருந்து நிறுவனம்

கொரோனா வைரஸ் பரிசோதனை

அமெரிக்க நாட்டில் தேர்தலுக்கு முன்பாக கொரோனா தடுப்பூசி தயாராக வாய்ப்பு இல்லை என்று அந்த நாட்டின் முன்னணி மருந்து நிறுவனம் அறிவித்து இருக்கிறது.

வாஷிங்டன்: அமெரிக்க நாட்டில் தேர்தலுக்கு முன்பாக கொரோனா தடுப்பூசி தயாராக வாய்ப்பு இல்லை என்று அந்த நாட்டின் முன்னணி மருந்து நிறுவனம் அறிவித்து இருக்கிறது. இது டிரம்புக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

சீனாவில் கடந்த டிசம்பரில் உருவான கொரோனா வைரஸ், உலகின் பிற எந்த நாட்டை காட்டிலும் அமெரிக்காவில் ருத்ரதாண்டவமாடி வருகிறது. அங்கு 72.34 லட்சம் பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். 2.07 லட்சம் பேர் கொரோனாவுக்கு இரையாகி உள்ளனர்.

அமெரிக்காவில் கொரோனா தொற்று பரவலை தடுக்க பிறப்பித்த பொது முடக்கங்கள், அந்த நாட்டின் தொழில், வர்த்தகத்தில் பெரும் பாதிப்புகளையும், வேலை இழப்புகளை ஏற்படுத்தி உள்ளன. இது, அமெரிக்க பொருளாதாரத்தில் பலத்த பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றை தடுத்து நிறுத்துவதற்கான தடுப்பூசியை உருவாக்குவதில் அந்த நாட்டின் முன்னணி மருந்து நிறுவனமான மாடர்னா முழு வீச்சில் இறங்கி இருக்கிறது.

இந்த நிறுவனம், கொரோனா வைரஸ் தடுப்பூசியை உருவாக்கி அதை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதித்துக்கொண்டும் உள்ளது. அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை நிர்வகிப்பதில் ஜனாதிபதி டிரம்பின் நிர்வாகம் தோற்று விட்டதாக அங்கு கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்த நிலையில் அடுத்த மாதம் 3-ந் தேதி அங்கு ஜனாதிபதி தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலுக்கு முன்பாக தடுப்பூசியை கொண்டு வந்து விட வேண்டும் என்று ஜனாதிபதி டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார். இது தொடர்பாக அதிகாரிகளை அவர் முடுக்கி விட்டுள்ளார்.

ஆனாலும்கூட தேர்தலுக்கு முன்பாக கொரோனா தடுப்பூசி, மக்கள் பயன்பாட்டுக்கு வருவதற்கு வாய்ப்பு இல்லை என தெரிய வந்துள்ளது.இது குறித்து மாடர்னா மருந்து நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஸ்டீபன் பன்சல் கூறுகையில், “ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பாக கொரோனா தடுப்பூசிக்கான அவசர அங்கீகாரத்துக்கு விண்ணப்பிக்க மாடர்னா தயாராக இருக்காது” என்று தெரிவித்துள்ளதாக ‘பைனான்சியல் டைம்ஸ்’ பத்திரிகை கூறி உள்ளது.

இதுபற்றி மேலும் அவர் கூறும்போது, “அமெரிக்காவில் அடுத்த வசந்த காலம் வரையில் மக்களின் அனைத்து பிரிவினருக்கும் கொரோனா தடுப்பூசியை வினியோகம் செய்வதற்கு முழு ஒப்புதல் கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை” என குறிப்பிட்டுள்ளார்.

குறைந்தபட்சம் அடுத்த மாதம் 25-ந் தேதிக்கு முன்னதாக அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திடம் கொரோனா தடுப்பூசியின் அவசர கால பயன்பாட்டுக்கு அங்கீகாரத்தை பெற மாடர்னா தயாராக இருக்காது என்றும் அவர் கூறியதாக தெரிய வந்துள்ளது.

உலகளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள மாடர்னா தடுப்பூசி, அமெரிக்க தேர்தலுக்கு முன்பாக பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வராது என்ற தகவல், ஜனாதிபதி டிரம்புக்கு பெருத்த பின்னடைவாக அமைந்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

தேர்தலுக்கு முன்பாக தடுப்பூசியை கொண்டு வந்து விட்டால், கொரோனாவை நிர்வகிப்பபதில் தனக்கு ஏற்பட்ட தோல்வியை மக்கள் புறந்தள்ளி விட்டு ஓட்டு போட்டு விடுவார்கள் என்பது டிரம்பின் எதிர்பார்ப்பாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது

malaimalar