நாட்டில், கோவிட்-19 சிவப்பு மண்டலத்தில் (40 அல்லது அதற்கும் மேலான நேர்வுகள் இருக்கும் பகுதிகள்) இருக்கும் அனைத்து பள்ளிகளும் நாளை முதல் மூடப்படும்.
இதில், கிள்ளான், சன்டாக்கான், பாபார் மற்றும் துவாரான் மாவட்டங்களும் அடங்கும். நேற்று மாலை, கல்வி அமைச்சு வெளியிட்ட ஓர் அறிக்கையில், இவ்வட்டாரத்தில் இருக்கும் பள்ளிகள் அக்டோபர் 23 வரை மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிள்ளான் வட்டாரத்தில் 142 பள்ளிகளும், சபாவின் 3 வட்டாரங்களில் 242 பள்ளிகளும் மூடப்படும் எனவும் அவ்வறிக்கையில் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
“இதில் ஆரம்ப, இடைநிலைப்பள்ளிகளுடன், கல்வி அமைச்சில் பதிவு பெற்றுள்ள அனைத்து தனியார் பள்ளிகளும் அடங்கும்.
“தொழிற்கல்வி கல்லூரிகள் மற்றும் விடுதிகள் கொண்ட பள்ளிகளும் மூடப்படவுள்ளன. எனவே, பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்கள் தங்கள் பிள்ளைகளை வந்து அழைத்துச் செல்ல வேண்டும்.
“பெற்றோருக்காகக் காத்திருக்கும் பிள்ளைகள், அவர்கள் வரும்வரையில், பள்ளி விடுதிகளிலேயே இருக்கலாம், அவர்களை விடுதியின் வார்டன் கவனித்துகொள்வார்.
“மாணவர்களுக்குத் தேவையான உணவை, பள்ளி நிர்வாகம் ஏற்பாடு செய்து தரும்,” எனக் கூறப்பட்டுள்ளது.
பள்ளி மூடப்பட்டிருக்கும் காலகட்டத்தில், கற்றல் கற்பித்தல் வீட்டில் இருந்தபடியே நடப்பதைப் பள்ளி முதல்வர்களும் தலைமையாசிரியர்களும் உறுதி செய்வர் என்றும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், தற்போது எஸ்.பி.எம். சோதனைத் தேர்வை நடத்தி வரும் சம்பந்தப்பட்டப் பள்ளிகள் இந்தத் தேர்வைப் பொருத்தமான வேறொரு தேதிக்கு மாற்றியமைக்கலாம் என்று கல்வி அமைச்சு கூறியது.