கொரோனா நோயாளிகளுக்கு 2-வது முறை தொற்று வந்தால் பாதிப்பு அதிகம் – விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

கொரோனா வைரஸ் தொற்று ஒரு முறை வந்து குணமாகி, மீண்டும் தொற்று ஏற்பட்டால் அப்போது பாதிப்பு அதிகமாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர்.

ஹூஸ்டன்: கொரோனா வைரஸ் தொற்று ஒரு முறை வந்து குணமாகி, மீண்டும் தொற்று ஏற்பட்டால் அப்போது பாதிப்பு அதிகமாக இருக்கும் என்று அமெரிக்காவின் நெவேடா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்து, ‘லான்செட் தொற்று நோய்கள்’ பத்திரிகையில் கூறி உள்ளனர்.

இவர்கள் ஆய்வில் 25 வயதான ஒரு நபரை பற்றி குறிப்பிட்டுள்ளனர். அவருக்கு 48 நாள் இடைவெளியில் 2-வது முறை கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இந்த முறை, அவர் ஆஸ்பத்திரியில் சேர்த்து, ஆக்சிஜன் செலுத்த வேண்டிய அளவுக்கு நோய் தீவிரமாகி இருக்கிறது. இதன் அர்த்தம், முதல் முறை கொரோனா பாதித்தபோது கிடைத்த நோய் எதிர்ப்பு சக்தியால், மீண்டும் கொரோனா ஏற்படாது என்பதற்கு உத்தரவாதம் இல்லை என்பதாகும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

அதே நேரத்தில் இது தொடர்பாக மேலும் ஆராய்ச்சிகள் நடத்தப்பட வேண்டும் என்று விஞ்ஞானிகள் கூறி உள்ளனர்.

மேலும், பெல்ஜியம், நெதர்லாந்து, ஹாங்காங், ஈக்குவடாரிலும் இப்படி இரண்டாவது முறை கொரோனா பாதிப்புக்கு ஆளானவர்கள், முதல் முறையை விட நோயின் தீவிர தாக்குதலுக்கு ஆளானதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

malaimalar