நீர் விநியோகத்திற்கு இடையூறு விளைவிக்கும் வகையில், நதிகளை மாசுபடுத்துபவர்களுக்கு எதிராக கடுமையான தண்டனை வழங்குவதற்கான முயற்சியைச் சிலாங்கூர் அரசாங்கம் இன்று மீண்டும் வலியுறுத்தியது.
இன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில், சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருதின் ஷாரி, அதிகபட்சம் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனையும், குற்றவாளிகளுக்கு எதிராக அதிகபட்ச அபராதத்தை இரட்டிப்பாக்கி, RM1 மில்லியனாக உயர்த்தவும் மாநில அரசு முயற்சிக்கும் என்றார்.
நவம்பர் மாதம் நடைபெறவிருக்கும் மாநிலச் சட்டமன்றக் கூட்டத்தில், சிலாங்கூர் நீர் மேலாண்மை ஆணையச் சட்டம் 1999-ல், திருத்தங்கள் செய்வதன் மூலம் இது சாத்தியமாகும்.
இம்மாதத்தில் மட்டும், சிலாங்கூரில், இரண்டு முறை நதி மாசுபாடு சம்பவங்கள் கண்டறியப்பட்டு, அதனால் ஒரு மில்லியனுக்கும் அதிகமான வீடுகள் பாதிப்படைந்ததைத் தொடர்ந்து மாநில அரசு இதனை முன்மொழிந்துள்ளது.
இதனைத் தடுக்க நதிப் படுகைகளில், 24 மணி நேரக் கண்காணிப்பு நடவடிக்கையை விரைவுபடுத்துமாறு சிலாங்கூர் நீர் வாரியத்திற்கு மாநில அரசு அறிவுறுத்தியுள்ளதாக அமிருதின் தெரிவித்தார்.
இதற்கிடையே, நீர் விநியோகத் தடையால் கோபமடைந்த பயனர்களில் பலர் தங்கள் நீர் கட்டணத்தில் கழிவு வேண்டும் என்றும், நீர் சீர்குலைவுக்குப் பொறுப்பேற்று மந்திரி பெசார் பதவி விலக வேண்டும் என்று சிலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீர் கட்டணக் கழிவு குறித்து கேட்டபோது, அதுபற்றி கலந்துபேசியுள்ளதாகவும், முடிவு பிறகு அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
எவ்வாறாயினும், கட்டணத்தில் தள்ளுபடி கொடுக்கும் யோசனைக்கு அவர் ஆதரவாக இல்லை என்று தோன்றுகிறது.
“நதி மாசுபடுவதைத் தடுக்க ஒரு பெரிய நிதி தேவைப்படுவதால், நாங்கள் பின்னர் முடிவை அறிவிப்போம்.
“நாங்கள் ஒவ்வொருவருக்கும் RM2 தள்ளுபடியைக் கொடுத்தால், மாநில அரசாங்கம் RM4 மில்லியனைச் செலவழிக்க வேண்டிவரும். நதி மாசுபாட்டைக் கண்டறிய மனிதவளத்தை அதிகரிக்க வேண்டும், அதற்கு இந்த RM4 மில்லியனைப் பயன்படுத்துவது நல்லது,” என்று அவர் மேலும் சொன்னார்.