ஊடகங்கள் மீது கடும் விமர்சனம் சர்ச்சையில் டொனால்டு டிரம்ப்

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில் தேர்தல் கருத்துக் கணிப்புகள் ஊடகங்கள் மற்றும் தொற்றுநோய் நிபுணர் டாக்டர் பாசி குறித்து விமர்சித்து அதிபர் டொனால்டு டிரம்ப் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் நவ. 3ல் நடக்கிறது. இதுவரை வந்துள்ள கருத்துக் கணிப்புகளில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் முன்னிலையில் உள்ளார்.’கொரோனா வைரஸ் பிரச்னையை சரியாகக் கையாளவில்லை’ என குடியரசுக் கட்சியைச் சேர்ந்த அதிபர் டொனால்டு டிரம்ப் மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். அவருக்கு தொற்று ஏற்பட்டதும் மக்கள் மத்தியில் அவரது செல்வாக்கு மேலும் சரிந்தது.தேர்தல் நெருங்கி வருவதால் டிரம்ப் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் நடந்த பிரசார கூட்டங்களின்போது கருத்துக் கணிப்புகள் ஊடகங்கள் மற்றும் தொற்றுநோய் நிபுணர் டாக்டர் பாசிக்கு எதிரான விமர்சனங்களை அவர் தொடர்ந்து முன் வைத்து வருகிறார்.

கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் டிரம்ப் இவ்வாறு டாக்டர் பாசிக்கு எதிராக பேசுவது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. மககள் இடையேயும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது.ஊடகங்கள் குறித்து தொடர்ந்து அவர் விமர்சனங்களை முன் வைத்து வருகிறார். குறிப்பிட்ட சில ஊடகங்கள் மீது பகிரங்கமாக குற்றஞ்சாட்டி வருகிறார்.’கடந்த தேர்தலில் வென்ற மாகாணங்கள் சிலவற்றில் டிரம்புக்கு பாதிப்பு ஏற்படலாம். இழுபறி மாகாணங்களில் நிலைமை மோசமாக உள்ளது’ என பரவலாகக் கூறப்படுகிறது.

ஆனால் ”நான் பயப்படவில்லை; கோபமாக உள்ளேன். அதிபராக என் கடமையை சிறப்பாக செய்துள்ளேன். அதற்காக மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால் அதை புரிந்து கொள்ளவில்லையே என்ற கோபத்தில் உள்ளேன்” என பிரசார கூட்டத்தின்போது டிரம்ப் கூறியுள்ளார். இதற்கிடையே அமெரிக்க வாழ் இந்தியர்கள் அரசியல் குழு என்ற அமைப்பு ஜனநாயகக் கட்சி அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் உள்ளிட்டோரின் பிரசாரத்துக்காக 73.44 கோடி ரூபாய் நன்கொடை வசூலித்துஉள்ளது

dinamalar