நாட்டை காப்பாற்ற மகாதீரா? பகல் கனவில் பெஜுவாங்!

இராகவன் கருப்பையா- நாட்டில் எந்நேரத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படலாம் என்ற யூகங்களுக்கிடையில் எந்த நாடாளுமன்ற உறுப்பினர் எந்த கூட்டணிக்கு ஆதரவாக உள்ளார் போன்ற ஆரூடங்களும் தொடர்ந்து வலுத்துக்கொண்டேதான் இருக்கின்றன.

இந்நிலையில் அடுத்த பிரதமர் யாராக இருக்கும் என்று அறுதியிட்டுக் கூற முடியாத அளவுக்கு குழப்பங்கள் நீடித்து வரும் சுழலில் மகாதீரின் பெஜூவாங் கட்சி செய்த ஒரு அறிவிப்பு கேலிக்கூத்தான ஒன்றாகவே கருதப்படுகிறது.

நாட்டின் ஜனநாயகம் என்றும் இல்லாத அளவுக்கு படு பாதாளத்திற்குள் தள்ளப்பட்டு தத்தளித்துக்கொண்டிருக்கும் இவ்வேளையில் பிரதமர் பதவிக்கு தனது உச்ச மன்றத் தலைவர் மகாதீரை முன்மொழிவதாக பெஜுவாங் அண்மையில் அறிவித்தது.

கடந்த பிப்ரவரி மாதத்தில் நிகழ்ந்த ஆட்சிக் கவிழ்ப்பைத் தொடர்ந்து மலேசியாவுக்கு எந்த குப்பனும் சுப்பனும் கூட பிரதமராகிவிடலாம் என்ற சூழலில் ஏற்கெனவே ஒரு பெரிய கும்பல் அப்பதவிக்கு வரிசை பிடித்து நிற்பது நாம் அறிந்த ஒன்றுதான்.

நீண்ட நாள்களுக்குப் பிறகு தனது அதிர்ஷ்டத்தை சோதிக்க 83 வயது தெங்கு ரஸாலியும் அந்தப் பட்டியலில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளதைப் போலிருக்கிறது இப்போது.

நிலைமை இவ்வாறு இருக்க 95 வயதில் 3ஆவது முறையாக அந்த அரியணையில் அமரத்துடிக்கும் மகாதீரை இப்போதெல்லாம் யாரும் பொருள்படுத்துவதும் இல்லை.

தனக்கு ஆதரவான 5 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பெர்சத்து கட்சியிலிருந்து அண்மையில் தூக்கியெறியப்பட்ட அவரிடமிருந்து 2 பேர் ஒதுங்கிவிட்டதாகத் தெரிகிறது.

பக்காத்தான் ஆட்சியில் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த சைட் சைடிக், இளையோரை அரசியலில் ஒன்று திரட்டும் நோக்கத்தில் ‘மூடா’ எனும் சொந்த கட்சியை தொடக்கியுள்ளதாக ஏற்கெனவே அறிவித்துவிட்டார்.

அதே அரசாங்கத்தில் கல்வியமைச்சராக இருந்த மஸ்லி மாலிக்கும் தற்போது அன்வார் பக்கம் சாய்ந்துள்ளார் என்று நம்பப்படுகிறது.

ஆக தனது பெஜுவாங் கட்சிக்கு இன்னும் அரசாங்க அங்கீகாரம் கூட கிடைக்காத நிலையில் மக்களிடையே தனது செல்வாக்கு தற்போது படுவீழ்ச்சி கண்டுள்ளதை மகாதீரும் நன்கு அறிவார்.

பக்காத்தான் ஆட்சியின் போது தான்தோன்றித்தனமாக அவர் செய்த பல முடிவுகளினாலும் வாக்குறுதியை மீறி அன்வாரிடம் பிரதமர் பதவியை ஒப்படைக்காததாலும் பெரும்பாலான மக்களின் வெறுப்பையும் அவர் சம்பாதித்துக்கொண்டார் என்பதை யாரும் மறுக்க முடியாது.

இந்நிலையில் மகன் முக்ரீஸ் உள்பட தன்னுடன் மிஞ்சியிருக்கும் 3 நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தவிர வேறு யார்தான் அவரை பிரதமர் பதவியில் அமர்த்த ஆர்வம் காட்டுவார்கள்!

பங்காளிக் கட்சிகளுடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி 2 ஆண்டுகளுக்கு மட்டுமே வழங்கப்பட்ட பிரதமர் பதவியை உடும்புப்பிடியாக பிடித்துக்கொண்டு அள்ளும் பகலும் சாக்கு போக்குச் சொல்லி அநாவசியமாக காலங்கடத்தியது மட்டுமின்றி ஆட்சி கவிழ்வதற்கும் அவர் வித்திட்டதை யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.

எனவே இடைக்காலத்திற்கோ நிரந்தரமாகவோ அவரிடம் பிரதமர் பதவியை ஒப்படைக்க எந்த கூட்டணிக்குத்தான் தைரியம் வரும்!

கடந்த 14ஆவது பொதுத் தேர்தலுக்கு முன் பக்காத்தானின் இடைக்கால பிரதமர் வேட்பாளராக எல்லா உறுப்புக் கட்சிகளுமே மகாதீரை ஒருமனதாக அங்கீகரித்தன – பொது மக்களும் கூட ஆர்வத்துடன் வரவேற்றார்கள். ஆனால் பிரபல வழக்கறிஞரும் மறைந்த கர்ப்பால் சிங்கின் இளைய புதல்வியுமான சங்கீட் கோர் மட்டும், ‘இவரை விட்டால் வேறு ஆளே இல்லையா’ என ஆதங்கப்பட்டதை இங்கு நாம் நினைவுக் கூறத்தான் வேண்டும்.

அண்மையில் எதிர்க்கட்சி கூட்டணியில் இருந்து தனது சகாக்களுடன் மகாதீர் பிரிந்து சென்றதே அவரை பிரதமர் வேட்பாளராக அறிவிக்காத காரணத்தினால்தான் என்பதும் நமக்குத் தெரிந்த ஒன்றுதான்.

அடுத்த பொதுத் தேர்தல் வரை நாட்டை காப்பாற்றுவதற்கு மகாதீரை பிரதமராக அறிவிக்க வேண்டும் என பெஜுவாங் செய்த பரிந்துரையினால் சினமடைந்துள்ள பொது மக்கள், தனது மகன் முக்ரீஸின் அரசியல் வாழ்க்கையை காப்பாற்றத்தான் அவர் துடிக்கிறாரே தவிர நாட்டை காப்பாற்ற அல்ல என முணுமுணுப்பதும் நம் காதுகளில் விழத்தான் செய்கிறது.

அந்த பரிந்துரையைத் தொடர்ந்து புக்கிட் கெலுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் ராம் கர்ப்பால் சிங் மட்டுமே கருத்துத்தார்.

இன்று நாட்டில் நிலவும் அவ்வளவு பிரச்னைகளுக்கும் மகாதீர்தான் காரணம் என்று சாடிய அவர் கடந்த 2018ஆம் ஆண்டிலிருந்து அவருடன் இணைந்து செயலாற்றியதற்கு மிகவும் வருத்தப்படுவதாகவும் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

ஆக ஒட்டுமொத்த மக்களின் அதீத வெறுப்புக்கு ஆளாகியிருக்கும் மகாதீரை பிரதமராக்க எண்ணும் பெஜுவாங்கின் திட்டத்தை பகல் கனவு என்று சொல்லாமல் வேறு எப்படிதான் வர்ணிப்பது என்றே தெரியவில்லை!