சீனாவின் கடும் எதிர்ப்பை மீறி தைவானுக்கு ரூ.17 ஆயிரம் கோடிக்கு ஆயுதங்களை விற்கும் அமெரிக்கா

சீனாவின் கடும் எதிர்ப்பையும் மீறி தைவானுக்கு ரூ.17 ஆயிரம் கோடிக்கு 100 ஹார்பூன் ஏவுகணை அமைப்புகளை விற்க அமெரிக்கா ஒப்புதல் தெரிவித்துள்ளது.

வாஷிங்டன்: தீவு நாடான தைவானை தங்கள் நாட்டின் ஒரு பகுதி என சீனா கூறி வருகிறது. இது தொடர்பாக தைவானுக்கும் சீனாவுக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் நீடிக்கிறது. இந்த விவகாரத்தில் அமெரிக்கா தைவானின் பக்கம் நிற்கிறது. தைவான் தன்னைத் தற்காத்துக் கொள்வதற்கு ஏதுவாக அந்த நாட்டுக்கு அமெரிக்கா ஆயுதங்களை விற்பனை செய்து வருகிறது. இதற்கு சீனா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

ஏற்கனவே வர்த்தகம் கொரோனா வைரஸ் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் கடுமையான மோதல் நீடிக்கும் சூழலில் தற்போது தைவான் விவகாரம் மோதலை மேலும் அதிகப்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தைவானுக்கு அமெரிக்கா ஆயுதங்களை விற்பனை செய்வதை தடுக்கும் விதமாக அமெரிக்காவின் 3 ஆயுத உற்பத்தி நிறுவனங்கள் மீது சீனா பொருளாதார தடை விதிப்பதாக நேற்று முன்தினம் அறிவித்தது.

இந்த நிலையில் சீனாவின் கடும் எதிர்ப்பையும் மீறி தைவானுக்கு 100 ஹார்பூன் ஏவுகணை அமைப்புகளை விற்க அமெரிக்கா ஒப்புதல் தெரிவித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு 2.37 பில்லியன் டாலர் ( இந்திய மதிப்பில் சுமார் ரூ 17 ஆயிரத்து 478 கோடி ) ஆகும். ஹார்பூன் ஏவுகணை கடல் பரப்பு மற்றும் நிலப்பரப்பில் உள்ள இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டது. இந்த ஏவுகணை 500 பவுண்டு எடையுள்ள ஆயுதங்களை சுமக்கும் திறன் கொண்டது. இது கடலோர பாதுகாப்பு தளங்கள், மேற்பரப்பில் வான் ஏவுகணை தளங்கள், விமானம், துறைமுகங்களில் உள்ள கப்பல்கள், துறைமுகங்கள் மற்றும் தொழில்துறை மையங்களை குறிவைத்து தாக்கும் திறன் கொண்டது.

malaimalar