தமிழ்ப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளை தமிழ் பள்ளிகளுக்கு அனுப்பும் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஓர் ஆய்வு காட்டுகிறது.
இதற்கு முன்பு இவர்கள் தங்கள் குழந்தைகளை தமிழ்ப்பள்ளிக்கு அனுப்பாமல் தேசிய பள்ளி அல்லது சீன பள்ளிகளுக்கு அனுப்புவது ஒரு கேள்விக்குறியாகவும், தமிழ்ப் பள்ளிகளின் மீது கொண்டுள்ள நம்பிக்கை குறைவை காட்டுவதாகவும் இருந்தது.
இந்த வருடம் மேற்கொண்ட இந்த ஆய்வு அந்தக் கணிப்பை தவிடுபொடியாக்கி தமிழ்ப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் தமிழ்ப் பள்ளியின் மீது புதிய நம்பிக்கை வைத்துள்ளதை காட்டுகிறது.
தமிழ் அறவாரியத்தின் சுப்பிரமணியன் இராகவன் மேற்கொண்ட ஒரு சிறிய ஆய்வின் பயனாக இந்த நம்பிக்கை கொடுக்கும் புதிய சூழல் கண்டறியப்பட்டது. ஒரு நிபுணத்துவ பொறியிலாளரான சுப்பிரமணியம் தமிழ் பள்ளிகளின் மீது வெகுவான நம்பிக்கையும் ஆர்வமும் கொண்டுள்ளவர்.
மலேசியகிணி தமிழ்ப்பிரிவுடன் அவர் பகிர்ந்த தகவலின்படி, சுமார் 88% தமிழ் பள்ளி ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளை தமிழ் பள்ளிகளுக்கே அனுப்புகிறார்கள். மீதமுள்ள 12 % பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பிற பள்ளிகளுக்கு அனுப்புகிறார்கள்.
எட்டு மாநிலங்களை சார்ந்த 31 தமிழ்ப்பள்ளிகளில் பணிபுரியும் 750 ஆசிரியர்கள் இதில் பங்கு எடுத்ததாக சுப்ரமணியம் கூறுகிறார். அவரது இந்த ஆய்வில் தமிழ் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களின் சுமார் 33% திருமணமாகாத அல்லது குழந்தைகள் இல்லாத அல்லது பள்ளிப் பருவம் அடையாத பிள்ளைகளைக் கொண்ட ஆசிரியர்கள் இந்தக் கணிப்பில் சேர்க்கப்படவில்லை என்கிறார்.
கடந்த காலங்களில் தமிழ் பள்ளிகளின் மீது நம்பிக்கையில்லாத தமிழ் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் தங்களுடைய குழந்தைகளை தமிழ்ப்பள்ளிகளுக்கு அனுப்புவது இல்லை என்பது ஒரு பெரும் குறையாக இருந்து வந்துள்ளது. ஒரு காலகட்டத்தில் தமிழ்ப் பள்ளிகள் என்றாலே மத்திய வர்க்கமும் மேற்குடியினரும் தங்கள் குழந்தைகளை தமிழ்ப்பள்ளிகளுக்கு அனுப்புவதில்லை.
ஆரம்ப காலம் முதல் தமிழ் பள்ளிகளுக்கு முழு ஆதரவு வழங்கி தங்கள் குழந்தைகளை முழுமையாக தமிழ் பள்ளிகளிலேயே தஞ்சமடைய வைத்தவர்கள் ஏழ்மையிலும் குறைந்த சம்பளத்தில் வாழும் தமிழர்கள் தான்.
இது தமிழ்மொழிக்கு ஒரு தாழ்வான மனப்பாங்கை அளித்துள்ளதை நம்மால் மறுக்க இயலாது. தமிழ் மொழியில் பேசுபவர்கள் என்றாலே அவர்களுடைய தரம் பொருள்முதல்வாத அடிப்படையில் ஏழ்மை என்ற சூழலில் இருப்பதாக பொருள் படும்.
தமிழ் பள்ளிகளின் தரம் உயர்வதற்கு இரண்டு முக்கியமான காரணங்கள் உள்ளன.
முதலாவதாக தமிழ் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் தங்களது பணியை செம்மையாக செய்து மாணவர்களின் மேம்பாட்டுக்காக தங்களுடைய பணியை அர்ப்பணிப்புடன் செய்து வருவது.
இரண்டாவதாக தமிழ் பள்ளிகளுக்குத் தங்கள் குழந்தைகளை அனுப்பும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் மீது ஆர்வம் கொண்டு அவர்கள் கல்வியின் மேம்பாட்டுக்காக போதுமான நேரத்தையும் பங்களிப்பையும் அளித்து வருவதாகும்.
குழந்தைகளை மையமாகக் கொண்டு செயல்படும் குடும்பங்களில் குழந்தைகளின் ஆர்வமும், ஈடுபாடும் கல்வி வளர்ச்சியும் அதிகமாகவே காணப்படுகிறது
அதோடு மட்டுமல்லாமல் தமிழ் பள்ளி என்பது ஒரு கல்வித்தலம் என்பது மட்டுமல்லாமல் அது தமிழர்களின் பண்பாட்டு மையமாக திகழ்வதால் அதன் மீது நம்பிக்கை கொண்டுள்ள பெற்றோர்கள் தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாடு மிக முக்கியம் என்ற கருத்தின் அடிப்படையில் தங்கள் குழந்தைகளை தமிழ்ப்பள்ளிகளுக்கு அனுப்புகிறார்கள்.
அவ்வகையில் கடந்த 20 ஆண்டுகளாக தமிழ் பள்ளிகளின் தரம் உயர்ந்து வருவதை காண முடிகிறது. இதன் பின்னணியில் சமுதாயமே ஒன்றிணைந்து தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டுக்காக பங்களித்து உள்ளதையும் ஹிண்ட்ராப் போராட்டத்திற்கு பிறகு அரசாங்கத்தின் பங்களிப்பு பெருமளவு உயந்துள்ளதையும் காணலாம்.
தமிழ் பள்ளிகளின் மீது நம்பிக்கை வைத்து தமிழ் பள்ளிகளில் தங்கள் குழந்தை பயில்வதை பெருமையாக கொள்ளும் இந்த அனைத்து தமிழ் பள்ளி ஆசிரியர்களுக்கும் நமது வாழ்த்துகள்.