பிரான்ஸ் தேவாலயத்தில் மூன்று பேர் குத்திக் கொலை

பாரீஸ்:ஐரோப்பிய நாடான பிரான்சில், தேவாலயம் ஒன்றில், மூன்று பேர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்சில், நைஸ் நகரில் உள்ளது நாட்டர்டேம் தேவாலயம். இங்கு, நேற்று காலை நடந்த பிரார்த்தனை கூட்டத்தின் போது, பயங்கரவாதி ஒருவர், மூன்று பேரை கத்தியால் குத்திக் கொலை செய்தார். இதில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர், உயிர் பிழைக்க, தேவாலயத்திற்கு வெளியே ஒடியபோது மயங்கி விழுந்து இறந்தார்.

தகவல் அறிந்து வந்த போலீசார், பயங்கரவாதியை துப்பாக்கியால் சுட்டு, கைது செய்தனர். அவர், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொலை செய்யும்போது, பயங்கரவாதி, மத முழக்கங்கங்களை எழுப்பியதாக, நைஸ் நகர மேயர் கிறிஸ்டியன் எஸ்ட்ரோசி தெரிவித்துள்ளார். கொலை சம்பவத்தை தொடர்ந்து, தேவாலயப் பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு, போலீசார் குவிக்கப்பட்டனர். நேற்று காலை, பிரான்ஸ் பார்லிமென்டில், கொரோனா மீண்டும் பரவுவது தொடர்பாக விவாதம் நடக்க இருந்தது.

தேவாலய சம்பவத்தை கேள்விப்பட்டதும், விவாதம் தள்ளி வைக்கப்பட்டு, இறந்தவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரன், சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு, போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.இந்நிலையில், இச்செயலை கண்டித்த பிரதமர் மோடி, ”பயங்கரவாதத்திற்கு எதிரான போரில், பிரான்சுக்கு இந்தியா உறுதுணையாகஇருக்கும்,” என்றார்.

dinamalar