“சிறை உடைப்போம்” என்ற அஸ்மினிடம் போலீஸ் விசாரணை?

கடந்த மாதம் பிகேஆர் காங்கிரஸின்போது ஆற்றிய உரை தொடர்பில் அக்கட்சியின் துணைத் தலைவர் அஸ்மின் அலியை ஜோகூர் போலீசார் விசாரணைக்கு அழைத்துள்ளனர்.

“எந்தப் பேச்சு பற்றி, எந்தச் சட்டத்தின்கீழ் விசாரணை, வாக்குமூலம் என்பதெல்லாம் எங்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை”, என்று அஸ்மினின் சிறப்பு அதிகாரி ஹில்மான் இதாம் மலேசியாகினியிடம் கூறினார்.

இன்று பிற்பகல் மணி 2.30க்கு ஜோகூர் போலீஸ் படை அதிகாரி ஒருவர், அந்த கோம்பாக் நாடாளுமன்ற உறுப்பினரைத் தொடர்பு கொண்டதாக ஹில்மான் கூறினார்.

அந்நேரம் அஸ்மின் சரவாக்கில் பிகேஆரின் தேர்தல் இயந்திரத்துக்கான முன்னேற்பாடுகளை பார்வையிடவும், அங்கு தேர்தல் சீரமைப்பு மீதான நாடாளுமன்ற சிறப்புக்குழுவின் பொது விசாரணையில் கலந்துகொள்ளவும் விமான நிலையம் சென்றிருந்தார்.

அஸ்மின் மாற்றரசுக் கட்சியின் தேர்தல் இயக்குனருமாவார்.

அஸ்மின் எப்போது ஜோகூர் போலீசைச் சந்திக்கச் செல்வார் என்று இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை. அவர்கள் விசாரணையை விரைவில் வைத்துக்கொள்ள விரும்பினால் கோலாலம்பூருக்கே வந்து விசாரிக்க வேண்டியதுதான் என்று ஹில்மான் தெரிவித்தார்.

எதைப் பற்றி போலீசார் அவரிடம் விசாரிக்கப் போகிறார்கள் என்பது உறுதியாகத் தெரியாவிட்டாலும் பிகேஆர் காங்கிரசில் “சிறையை உடைத்தெறிவோம்” என்று அவர் குறிப்பிட்டதன் தொடர்பில் அவர் விசாரிக்கப்படலாம் என்று ஊகிக்கப்படுகிறது.

“அது சாத்தியம்தான், ஆனால், எதைப் பற்றி விசாரணை என்பது அஸ்மினிடம் தெரிவிக்கப்படவில்லை”, என்று ஹில்மான் கூறினார்.

பிகேஆர் இளைஞர் பகுதியின் ஆண்டுக்கூட்டத்தில் பேசியபோது அஸ்மின், பிகேஆர் நடப்பில் தலைவர் மீண்டும் சிறையிடப்பட்டால் “சிறையின் சுவர்களை உடைத்தெறிவோம்” என்று கூறியிருந்தார்.

அநீதிக்கு எதிராகப் போராடுவோம் என்பதைக் குறிக்கவே அவ்வாறு கூறியதாகவும் மற்றபடி அதற்குச் சிறைக்கூடத்தை உடைப்போம் என்று நேரடிப் பொருள் கொள்ளக்கூடாது என்றும் அஸ்மின் பின்னர் விளக்கம் கூறினார்.

ஆனால், அம்னோவும் அரசாங்க ஆதரவாளர்களும் அதை ஏற்கவில்லை, அது முறையற்ற பேச்சு என்று சாடினார்கள்.