மலேசியாகினியும் மலாய் மெயிலும் கைகோர்த்தன

மலேசியாகினியும் மலாய் மெயிலும் செய்திகளைப் பரிமாறிக்கொள்ளும். இதற்கான உடன்பாடு இன்று காணப்பட்டது.

இதன்வழி நாட்டின் மிகப் பழைய ஆங்கில நாளேடும் 12-அண்டுகள் நிரம்பிய அரசியல் செய்தித்தளமும் ஒன்று சேர்கின்றன.

இதன்படி அடுத்த மாதத்திலிருந்து காசுக்கு விற்கப்படும் காலை நாளேடாக மறுவெளியீடு காணவுள்ள மலாய் மெயில், மலேசியாகினியில் வெளிவரும் செய்திகளையும் அண்மையில் தோற்றம் கண்ட  Mole.my செய்தித்தளத்தில் இடம்பெறும் செய்திகளையும் பயன்படுத்திக்கொள்ளும்.

“இதன்வழி ஒரு குறிப்பிட்ட விவகாரம் பற்றி இரு பக்கக் கருத்துகளையும் அறிந்துகொள்ளும் வாய்ப்பு வாசகர்களுக்குக் கிடைக்கும்”, என்று மலாய் மெயிலை நடத்தும் ஊடக நிறுவனமான ரெட்பெர்ரி குழுமத்தின் தலைமைச் செயல் அதிகாரி பிலிப் கருப்பையா கூறினார்.

அந் நாளேடு “புதிய தோற்றத்துடன் வாசகர்களைக் கவரும் விதத்தில் வெளிவரும்.”

மலாய் மெயில் 1896 டிசம்பர் 1-இல் முதன்முதலாக வெளியிடப்பட்டது. 1980-களில் அக்கறை கொண்ட பத்திரிகை என்ற அடைமொழியுடன் அது பவனி வந்தது. 2008, மே 5-இலிருந்து அது மாலை நாளிதழாக மாறி இலவசமாக வழங்கப்பட்டது.

ஒரு காலத்தில்  அம்னோவுடன் தொடர்புகொண்ட மீடியாபிரைமா பெர்ஹாட்டின் ஒரு பகுதியாக இருந்த மலாய் மெயில் இப்போது  ரெட்பெர்ரி மீடியா சென்.பெர்ஹாட்டுக்கு சொந்தமாகியுள்ளது.

இலவச மாலை நேர இதழாக அது ஜனவரி 30-வரை இணையத்தளத்தில் கிடைத்து வரும். அதன்பின் அது ஒரு தேசிய நாளேடாக ஒரு ரிங்கிட் விலையில் விற்கப்படும்.

மலேசியாகினியின் செய்திகள் மலாய் மெயிலில் இடம்பெறப்போவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார் மலேசியாகினி தலைமைச் செயல் அதிகாரி பிரமேஷ் சந்திரன்.இது சுயேச்சையாக செய்திகளை வெளியிடும் அமைப்பான  மலேசியாகினிக்கு கிடைத்துள்ள ஓர் அங்கீகாரமாகும் என்றாரவர்.

“இதன்மூலம் எங்கள் செய்திகள் மேலும் விரிவான வாசகர் கூட்டத்தைச் சென்றடையும் வாய்ப்பு கிடைக்கிறது.”

இந்த ஏற்பாட்டின்படி, மலேசியாகினியின் செய்திகள் மலாய் மெயிலில் இடம்பெறுவதுபோல் மலாய் மெயிலில் வெளிவரும் சுவையான செய்திகளை மலேசியாகினியும் பயன்படுத்திக்கொள்ளும்.

ஊடகங்கள்மீதான அரசாங்கத்தின் கெடுபிடிகளால் வெறுப்படைந்த சமூக ஆர்வலர்களும் செய்தியாளர்களும் சேர்ந்து தொடங்கியதுதான் மலேசியாகினி.

மலேசியாகினிக்கும் ஒரு செய்தித்தாள் வெளியிடும் ஆசை உண்டு. அதற்கு உரிமம் கேட்டு விண்ணப்பம் செய்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. உள்துறை அமைச்சர் தொடர்ந்து நிராகரித்து வருகிறார். ஆகக் கடைசியான நிராகரிப்புக்கு எதிராக மலேசியாகினி வழக்கு தொடர்ந்துள்ளது.

செய்திகளைப் பரிமாறிக்கொள்ளும் இதேபோன்ற ஏற்பாட்டை மலேசியாகினி யாகூ செய்திகளுடனும் செய்துகொண்டிருக்கிறது.

“ பல தளங்களில்-இணையத்தில், கைபேசிகளில், தத்தல் தனிப்பயன் கணினிகளில்(டேப்லட்ஸ்), செய்தித்தாள்களில்- இடம்பெற வேண்டும், பல மொழிகளில் வெளிவர வேண்டும் என்பதுதான் மலேசியாகினியின் நோக்கம்.அதிகமதிகமான மலேசியர்களைச் சென்றடைவதன்வழி மலேசியாவை மாற்ற உதவ முடியும் என்று நம்புகிறோம்”, என்றார் பிரமேஷ்.

மலேசியாகினி தன் வருமானத்துக்கு சந்தாவையும் விளம்பரத்தையும்தான் நம்பியுள்ளது.இவை தவிர்த்து மற்ற வழிகளில் வருமானத்தைப் பெருக்க அது நோக்கம் கொண்டிருப்பதாக மலேசியாகினியின் தலைமை செய்தி ஆசிரியர் ஸ்டீபன் கான் ஒருமுறை தலையங்கம் எழுதியிருந்தார்.

“எங்கள் செய்திகளை மற்றவர்களுக்கு விற்பது கூடுதல் வருமானம் பெறுவதற்கான வழிகளில் ஒன்று.அந்த வகையில் ஆண்டுத் தொடக்கத்தில் யாகூ-வுடன் ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டோம். அதன்வழி மலேசியாகினியின் செய்திகளை அந்தத் தேடுதளம் விலைக்கு வாங்கிப் பயன்படுத்திக்கொள்கிறது”, என்றாரவர்.